செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
27c489f9-7a59-43c0-885e-1ee76d8d31eb
-

பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி முதியோர் மகிழ்உலா

தோ பாயோ ஈஸ்ட்டை சேர்ந்த முதியோர் சிங்கப்பூர் ஆற்றில் உல்லாசப் படகில் சென்று மகிழ்ந்தனர். அதோடு, அவர்கள் நேற்று கடலோர தோட்டங்களுக்கும் சென்று களித்தனர். இதற்காக அவர்கள் சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான சுற்­று­லாப் பற்­றுச்­சீட்­டைப் பயன்படுத்தினர்.

அந்த முதியவர்களில் பலரும் வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள்.

கொவிட்-19 காரணமாக நீண்டகாலத்திற்கு அவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் மனரீதியிலும் மிகவும் சிரமத்தை அனுபவித்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு இப்போதுதான் அவர்கள் முதன்முறையாக உல்லாசப் பயணத்தை மேற்கொண்டனர். சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து உதவிய 'டூரிசம் ரெயின்போ' என்ற அமைப்புக்கு பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுப்பாட் நன்றி கூறினார்.

சுற்றுலா மேற்கொண்ட முதியவர்களில் ஒருவரான திருவாட்டி சரசம்மா சாந்தகுமாரி, 78, என்பவர் சிங்கப்பூர் ஆற்று மகிழ்உலாவின் ஒரு பகுதியாக கிளார்க் கீ வட்டாரத்திற்குச் சென்றது தமக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது என்று தெரிவித்தார். "அந்தப் பகுதி மிகவும் மாற்றமடைந்து இருக்கிறது. பெரும்பாலான கட்டடங்களை என்னால் அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை," என்று அந்த மாது குறிப்பிட்டார்.

இதனிடையே, சுவா சூ காங் குடியிருப்பாளர்கள் 45 பேர் சிங்கப்பூர் ராட்டினத்திற்குச் சென்று மகிழ்ந்தனர்.

சுவா சூ காங் சமூக மன்றத்தைச் சேர்ந்த மக்கள் கழக அடித்தள அமைப்புத் தலைவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவின் ஒரு பகுதியாக இது இடம்பெற்றது. சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான சுற்­று­லாப் பற்­றுச்­சீட்­டை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியவில்லை என சில முதியவர்கள் அந்தச் சமூக மன்றத்திடம் தெரிவித்தனர். அதையடுத்து அந்த மகிழ்உலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

விசாரணையில் 11 பேர்

பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் உள்ள புளோக் 542ல் இம்மாதம் 22ஆம் தேதி சட்டவிரோதமாகக் கூடியது, வேண்டுமென்றே காயம் விளைவித்தது ஆகிய செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 14 முதல் 19 வரை வயதுள்ள ஐந்து இளையர்களை போலிஸ் அதிகாரிகள் கைது செய்து இருக்கிறார்கள்.

வேண்டுமென்றே காயம் விளைவித்ததன் தொடர்பில் 24 முதல் 37 வரை வயதுள்ள இதர நான்கு ஆடவர்களும் 16 மற்றும் 17 வரை வயதுள்ள இரண்டு பதின்ம வயது பெண்களும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

போலிசாருக்குப் புகார் வந்ததை அடுத்து, பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தி 11 பேரின் அடையாளங்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

தனியார் மருத்துவர்கள் கவலை

காப்புறுதிச் சந்தாதாரர்களுக்கான மருத்துவர்கள் குழுவில் பல தனியார் துறை சிறப்பு மருத்துவர்கள் இடம்பெறாமல் விடுபட்டு இருக்கிறார்கள் என்று கூறி, ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்ட காப்பீட்டாளர்களிடம் தனியார் துறை மருத்துவர்கள் பகிரங்கமாக கவலை தெரிவித்துள்ளனர்.

அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர்களில் தனியார் துறை வல்லுநர்கள் 21 விழுக்காடு மட்டுமே என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் தெளிவாக இல்லை என்று தெரிவிக்கும் அந்த மருத்துவர்கள், பல ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்ட காப்பீட்டாளர்கள் மருத்துவர்களுக்கு ஈடு செய்யும் தொகையும் குறைந்த அளவே என்கிறார்கள்.

சிங்கப்பூர் மருத்துவச் சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த அம்சங்கள் எழுப்பப்பட்டு இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மனநலனுக்குப் பசுமைச் சூழல்

கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலையும் கவலையையும் சமாளிக்கும் விதமாக பசுமை இடங்களில் கவனம் செலுத்தும் போக்கு மக்களிடம் காணப்படுகிறது. இதில் வியப்பு எதுவும் இல்லை என்று மனநல வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இயற்கையோடு இணைந்திருப்பது மனதிற்கு உற்சாகத்தையும் ஆக்ககரமான மனநலனையும் ஏற்படுத்தக்கூடியது என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்து இருப்பதாக அனபெல்லா சைக்கலாஜி என்ற மருந்தகத்தில் பிரதான மனோவியல் வல்லுநராக இருக்கும் டாக்டர் அனபெல்லா சோவ் கூறுகிறார்.

சிங்கப்பூரில் பெரும்பாலான வீடுகளில் தோட்டங்கள் இல்லை. ஆகையால் சொந்தமாக பசுமை இடங்களை உருவாக்க சிங்கப்பூரர்கள் புத்தாக்க வழிகளை நாட வேண்டிய தேவை இருக்கிறது என்றார் அவர்.

இதனிடையே, ஒரு பிரச்சினையில் இருந்து அல்லது வேலையிலிருந்து தப்பிக்க வழியில்லை என்று ஒருவர் உணரும் போது அவருக்கு மனஉளைச்சல் தொடங்குகிறது என்று மனோவியல் நல்வாழ்வு நிலையம் என்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லிம் பூன் லெங் என்ற வல்லுநர் கூறுகிறார்.

புத்தம்புது காற்று, பசுமை எல்லாம் ஒருவர் மனதளவில் புத்துணர்வு பெற உதவும் என்றும் அவர் கூறினார்.