செம்பவாங் குழுத்தொகுதியின் 'காய்கறி தோட்ட விளைச்சல் செயல்திட்டத்தின்' கீழ், அந்தப் பகுதியில் வசிக்கும் வசதி குறைந்தோருக்கு இரண்டாம் கட்டமாக நேற்று காய்கறிகள் அறுவடை செய்து விநியோகிக்கப்பட்டன.
இத்திட்டம் பிப்ரவரி 28ல் முதன்முறையாகத் தொடங்கப்பட்டது.
செம்பவாங்கில் பரந்து அமைந்துள்ள 23 சமூகத் தோட்டங்களில் குடியிருப்பாளர்கள் மாறி மாறி காய் கறிகளைப் பயிரிடுவார்கள்.
மத்திய செம்பவாங் குடியிருப்பாளர்கள் கட்டமைப்புச் சமூகத் தோட்டத்தில் நேற்று காய்கறிகள் பறிக்கப்பட்டன.
ஏறத்தாழ 20 பேர் காய்கறிகளைச் செடிகளிலிருந்து பறித்து சேகரித்தனர்.
செம்பவாங் மத்திய பகுதியைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், காய்கறி அறுவடையில் பங்கெடுத்துக்கொண்டார். ஏறத்தாழ 60 கிலோ காய்கறிகள் பறிக்கப்பட்டன.
"கம்போங்கில் வசித்த அனுபவத்துடன்கூடிய குடியிருப்பாளர்கள், அப்பகுதியின் முன்னாள் எம்பியும் அமைச்சருமான கோ பூன் வான் வழிகாட்டலின் கீழ், தோட்டங்களை அமைத்து காய்கறிகளைப் பயிரிடத் தொடங்கினர்.
"அத்தகைய தோட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை வருவாய் குறைந்த குடும்பங்களுக்கு கொடுத்து உதவலாம் என்பதால் நான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பெடுத்துக் கொண்டதும் அந்த யோசனையைத் தொடர முடிவு செய்தேன்.
''செம்பவாங் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. மேலும் கான்கிரீட் கட்டடங்கள் எழும்பவிருக்கின்றன. அதே நேரத்தில் அங்கு கம்போங் உணர்வும் தொடரும் என்பது மிக அருமையான ஒன்றாக உள்ளது," என்று அமைச்சர் கூறினார்.
காய்கறிகளைச் சேகரித்த தொண்டூழியர்கள், இரு வாடகை புளோக்குகளுக்குச் சென்று அவற்றில் குடியிருக்கும் சுமார் 30 குடும்பங்களுக்குக் காய்கறிகளுடன் முட்டை, ரொட்டி, மளிகைப் பொருட் களையும் கொடுத்தார்கள்.

