பெண்டிமியர் சாலையில் உள்ள காப்பிக்கடையில் ஆடவர் ஒருவரையும் அவரது மகனையும் கத்தியால் தாக்கிய முதியவருக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
73 வயது ஜியோ கிம் ஹொக் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.
இதற்கு முன்பு அவர் புரிந்த குற்றங்களுக்காக அவருக்குக் கட்டாய சிகிச்சை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவர் இதற்கு முன்பு புரிந்த குற்றங்கள் பற்றிய தகவல்களும் வெளியிடப்படவில்லை.
கட்டாய சிகிச்சை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் சிறைத் தண்டனைக்குப் பதிலாக தண்டனைக் காலத்துக்கு சிகிச்சை பெற வேண்டும்.
இந்த உத்தரவை ஜியோ மீறியதால் அவருக்குக் கூடுதலாக மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் மனநலக் கழகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவார். சமூகத்துடன் இணைய மன ரீதியாக தகுதியானவர் என்று மதிப்பீடு செய்யப்படும் வரை அவர் அங்கு இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காப்பிக்கடையை நடத்தும் நிறுவனமான ஜிஎச்கே ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவரான 69 வயது திரு கோ ஹங் குவானை ஜியோ கத்தியால் தாக்கினார். இதில் திரு கோவின் இடது கரத்தில் காயம் ஏற்பட்டது.
திரு கோவின் மகனான 31 வயது திரு ரேமண்ட் கோ மெங் சுவானுக்கு நெஞ்சுப் பகுதி உட்பட உடலெங்கும் பல காயங்கள் ஏற்பட்டன.

