சிங்கப்பூர் ஆகாயப் படைக்கு மேம்படுத்தப்பட்ட எச்225எம் வகை ஹெலிகாப்டர் விநியோகம் தொடங்கி விட்டது. இதையடுத்து, 1983ஆம் ஆண்டில் இருந்து சேவையில் இருக்கும் சூப்பர் ஃபூமா வகை ஹெலிகாப்டர்கள் படிப்படியாக விடைபெறும்.
இந்த எச்225எம் ஹெலிகாப்டர்கள், விமானச் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவற்றைக் கொண்டு பயிற்சி இடம்பெறும் என்றும் சிங்கப்பூர் ஆகாயப் படை தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாக நேற்று தெரிவித்தது.
ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், இந்த எச்225எம் ஹெலிகாப்டர்களைத் தயாரித்து வருகிறது.
"செயல்பாட்டிற்கு வந்த பிறகு, சூப்பர் ஃபூமா ஹெலிகாப்டர்களின் இடத்தை எச்225எம் ஹெலிகாப்டர்கள் பிடிக்கும்," என்று ஆகாயப் படை குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, வரும் மாதங்களில் மூன்று எச்225எம் ஹெலிகாப்டர்களை சிங்கப்பூர் ஆகாயப் படை பெறத் தொடங்கும் என்று தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் இம்மாதத் தொடக்கத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்து இருந்தார்.
ஏஎஸ்332எம் சூப்பர் ஃபூமா ஹெலிகாப்டரைவிட எச்225எம் ஹெலிகாப்டர் 20% அதிக தொலைவு செல்லும்.
அவை, சிஎச்-47 வகை ஹெலிகாப்டர்களுடன் இணைந்து, பலவகைப்பட்ட நடவடிக்கைகளில் சிங்கப்பூர் ஆகாயப் படையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவக் காரணங்களுக்கான வான்வழி வெளியேற்றம், தேடி மீட்டல், மனிதாபிமான உதவி, பேரிடர் நிர்வாகம், கடல்துறைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
இப்போது உலகம் முழுவதும் 104 எச்225எம் ஹெலிகாப்டர்கள் சேவையில் இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்தது. ஒட்டுமொத்தமாக அவை 143,000 மணி நேரத்திற்கு மேல் வானில் பறந்து உள்ளன.
முதன்முறையாக 2000 நவம்பர் மாதத்தில் அந்த ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தது.
பிரேசில், பிரான்ஸ், இந்தோனீசியா, மலேசியா, மெக்சிகோ, தாய்லாந்து, குவைத் உள்ளிட்ட நாடுகளில் அவை இப்போது பயன்பாட்டில் இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் குறிப்பிட்டது.

