கெய்ரோ: சூயஸ் கால்வாயில் தரைதட்டி ஆறு நாட்களாக வழியை அடைத்துக் கொண்டு நின்ற 400 மீட்டர் நீளமுள்ள எவர்கிரீன் சரக்குக் கப்பல், இழுவைகளின் உதவியால் மீண்டும் நகரத் தொடங்கியது. அதையடுத்து அவ்வழியே கப்பல் போக்குவரத்து தொடங்கியது. அவ்வழியைக் கடக்க முடியாமல் 422 கப்பல்கள் அக்கடல் பகுதியில் காத்துக்கொண்டிருந்தன.
அவை யாவும் மூன்றரை நாட்களுக்குள் சூயஸ் கால்வாயைக் கடந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ரேபி செய்தியாளர்களிடம் கூறினார். சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டதால் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான கடல்வழி சரக்குப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.அந்த சரக்குக் கப்பல் மார்ச் 23 ஆம் தேதி சூயஸ் கால்வாயைக் கடக்கும்போது பலத்த காற்று வீசியதால் குறுக்குவாட்டில் திரும்பியது. அப்போது அக்கப்பல் தரைதட்டியதாகக் கூறப்படுகிறது.
குறுக்குவாட்டில் கிடந்த கப்பலை நேர்ப்படுத்தும் பணியில் டச்சு நாட்டு நிறுவனத்துடன் சூயஸ் கால்வாய் ஆணையத்தின் ஊழியர்கள் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சக்திவாய்ந்த இழுவைகள் பயன்படுத்தப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் கப்பல் ஆழமான நடுப்பகுதிக்கு இழுத்து நகர்த்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
எவர்கிரீன் லைன் கப்பலின் முன்பகுதி சேதமடைந்திருந்தாலும் கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சரக்குக் கொள்கலன்களுக்கு எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

