சிங்கப்பூரர்கள் மின்னிலக்கத் திறன்களைப் பெறவும் அதுதொடர்பான இடைவெளியை நிரப்பவும் வகுக்கப்பட்டுள்ள அடித்தளத் திட்டங்களுக்குத் தேவைப்படும் வளங்களை ஏற்படுத்த $7.6 மில்லியன் நிதி சேர்ந்துள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட்ட தேசிய இயக்கம் மூலம் நன்கொடைகளும் வெள்ளிக்கு வெள்ளி என்ற அடிப்படையிலான அரசாங்க உதவியும் திரண்டதன் மூலம் இந்த நிதி உதவி வளர்ந்துள்ளது.
'டிஜிட்டல் ஃபார் லைஃப்' என்னும் வாழ்க்கைக்கான மின்னிலக்க இயக்கத்தை கடந்த மாதம் அதிபர் ஹலிமா யாக்கோப் தொடங்கிவைத்தார். அதன் புரவலர் அவர்தான். மின்னிலக்கத் தேவைக்கான நிதி சேர்ப்புத் திட்டத்தையும் அப்போது அவர் தொடங்கினார். அதற்கான முதல் நிதியாக அதிபர் சவால் அறநிதி மூலம் திரண்ட $2.5 மில்லியன் வழங்கப்பட்டது.
இதனுடன் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும் கெப்பல் கார்ப்பரேஷன் நிறுவனமும் $1.3 மில்லியன் நன்கொடை அளித்ததைத் தொடர்ந்து நிதியின் மொத்தத் தொகை $3.8 மில்லியனாக உயர்ந்தது.
வெள்ளிக்கு வெள்ளி என்னும் அரசாங்கக் கைகொடுப்பு நடவடிககை மூலம் அத்தொகை இரட்டிப்பாகி $7.6 மில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று இதனை அறிவித்தார்.
சமூகம் வழிநடத்தும் திட்டங்களை ஆதரிக்கவும் மின்னிலக்கத்தில் அனைவரையும் உள்ளடக்கி அவர்களுக்குத் திறன்களை ஊட்டவும் தேவைப்படும் யோசனைகளை இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் இயக்கம் வகுக்கும் என்று அப்போது திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
ஐஎம்டிஏ எனப்படும் தகவல்
தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஏற்படுத்தி உள்ள நிதி சேர்ப்பு நடவடிக்கை தற்போது திரண்டுள்ள நிதியை அடுத்த மூன்றாண்டுகளில் $10 மில்லியனாக உயர்த்த இலக்கு வகுத்துள்ளது.
கொவிட்-19 சூழல் மின்னிலக்கமயத்துக்கான தேவையை வேகப்படுத்தியதுடன் அதுபற்றி அறியாதோர் பின்தங்கும் நிலை ஏற்படும் என்னும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது.
அத்தகைய நிலையில், நாட்டின் மின்னிலக்க மீள்திறனை வலுப்படுத்த உதவவும் மின்னிலக்க ஆபத்துகளைக் கண்டறிய அல்லது குறைக்க பொதுமக்களுக்கு உதவவும் வாழ்க்கைக்கான மின்னிலக்க இயக்கம் தொடங்கப்பட்டது.
அதற்கு டிரைஜென், எஞ்ஜினியரிங் குட், கூகல் ஆகிய மூன்று பெரிய அமைப்புகள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றன.
குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் மூத்தோர் என அனைத்துப் பிரிவினரும் மின்னிலக்கத் திறன்
களையும் அறிவாற்றலையும் பெறும் வகையில் இம்மூன்று அமைப்புகளும் தங்களது முயற்சிகளை விரிவுபடுத்த உள்ளன.

