லிட்டில் இந்தியா வட்டாரத்தின் தேக்கா/ரேஸ் கோர்ஸ் பகுதிகளில் உள்ள வணிகச் சொத்துகள் மீண்டும் விற்பனைக்குச் சந்தைக்கு வந்துள்ளன.
நான்கு தனித்தனி வர்த்தகக் கட்டடங்கள் அவற்றுள் அடங்கும்.
விற்பனைக்கு விடப்பட்டுள்ள 25,865 சதுர அடி பரப்பளவு வர்த்தகத் தளத்தின் தற்போதைய விலை $55 மில்லியன் என 'ஷோசூட் கன்சல்டன்சி' என்னும் சொத்துச்சந்தை ஆலோசனை நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த வர்த்தக வட்டாரத்தில் இரண்டு தளங்களைக் கொண்ட பழமைப் பாதுகாப்பு பங்களா ஒன்றும் அடங்கும். முன்னொரு சமயத்தில் டான் டெங் நியா என்னும் தொழிலதிபருக்குச் சொந்தமாக இந்த பங்களா இருந்தது.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ஈராண்டுகளுக்கு முன்னர், 2019 பிப்ரவரியில் சொல்லப்பட்ட விலையைக் காட்டிலும் கிட்டத்தட்ட 22 விழுக்காடு குறைவு. அப்போது $70.6 மில்லியனுக்கு இந்தத் தளம் விலை பேசப்பட்டது.
லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரமுள்ள இந்தப் பகுதி நான்குக் கட்டடங்களை உள்ளடக்கி உள்ளது.
இந்தக் கட்டடங்களின் உள்ளளவு சுமார் 16,800 சதுர அடி.
எண் 672 சந்தர் ரோட்டில் 14 கடைகளை உள்ளடக்கிய ஒற்றைத்தள சில்லறை வர்த்தகக் கட்டடமும் இதனுள் வருகிறது என 'ஷோசூட் கன்சல்டன்சி' கூறியுள்ளது.

