ஏப்ரல் 12 முதல் கை சுத்திகரிப்பான் திரவத்தை இலவசமாகப் பெறலாம்
சிங்கப்பூரில் எல்லா குடும்பங்களும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 500 மி.லி. கை சுத்திகரிப்பான் திரவத்தை இலவச மாகப் பெற்றுக்கொள்ளலாம். சிங்கப்பூர் முழுவதும் உள்ள எல்லா 108 சமூக நிலையங்களிலும் சமூக மன்றங்களிலும் உள்ள தானியக்க இயந்திரங்களில் ஏப்ரல் 25ஆம் தேதி வரை இதனைப் பெற்றுக்கொள்ளலாம் என தெமாசெக் அறநிறுவனம் தெரிவித்துள்ளது. தெமாசெக் கடைவீடுகளி லும் இத்திரவம் வழங்கப்படும். ஆல்கஹால் ரசாயனக் கலவை அற்ற கை சுத்திகரிப்பான் திரவத்தைப் பெற குடியிருப்பாளர்கள் சுத்தமான இரண்டு காலி போத்தல்கள் வரை கொண்டு செல்லலாம். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்கான பயனீட்டுக் கட்டணப் படிவத்தை அவர்கள் தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் படிவத்தில் 'க்யூஆர்' குறியீடு இருப்பது அவசியம். இதற்குப் பதில் சிங்கப்பூர் பவர் நிறுவனத்தின் தங்களது கணக்கு எண்ணைத் தெரிவிக்கலாம். தெமாசெக் அறநிறுவனம் கை சுத்திகரிப்பான் திரவத்தை இலவசமாக வழங்குவது
இது இரண்டாவது முறை. ஏற்கெனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதனை அந்நிறுவனம் வழங்கியது.
ரயிலில் பேசுவதைத் தவிர்க்க இன்று முதல் புதிய பிரசார நடவடிக்கை
பொதுப் போக்குவரத்தில் கொவிட்-19 பரவும் அபாயத்தைத் தணிக்க புதிய பிரசார நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படுகறிது. 'தயவுசெய்து பேசுவதைத் தவிர்க்கவும்' என்று எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட அறிவிப்பை எம்ஆர்டி நிலைய ஊழியர்கள் ஒவ்வொரு எம்ஆர்டி நிலையத்திலும் ஏந்தி நிற்பர். ரயிலில் பயணம் செய்யும்போது பிற பயணிகளிடமோ கைபேசியிலோ பேசுவதைப் பயணிகள் தவிர்க்கவேண்டும் என்பதை உணர்த்த இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் 75 விழுக்காட்டு ஊழியர்கள் அலுவலகம் செல்லும் வகையில் சிங்கப்பூர் அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து புதிய பிரசார நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது வரை இது 50 விழுக்காடாக உள்ளது.
தடுப்பு மருந்தின் புதிய ஆற்றல் குறித்து நிபுணர்கள் கருத்து
கொவிட்-19 தடுப்பூசி மருந்தை மூக்கு வழியாகவோ வாய் வழியாகவோ எடுத்துக்கொள்ளும்போது மேல் சுவாசப்பாதை யில் கிருமியைத் தடுக்கும் ஆற்றல் கூடுதலாகக் கிடைக்கும் என்றும் இது கிருமிப் பரவலைக் குறைக்கும் என்றும் சிங்கப்பூரின் தொற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தடுப்பு மருந்தை அவ்வாறு எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா என்பது பற்றியும் அதன் ஆற்றல் குறித்தும் இன்னும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் நிரூபிக்கப்பட வில்லை என்கின்றனர் அவர்கள்.
81% பட்டதாரிகளுக்கு வேலை
சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் (எஸ்யுடிடி) பட்டதாரிகளில் கிட்டத்தட்ட 81 விழுக்காட்டினருக்கு கடந்த ஆண்டில் முழுநேர வேலை கிடைத்தது. அதேநேரம் இதர நான்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களில், 70 விழுக்காடு, அதாவது 10ல் எழுவருக்குக் கடந்த ஆண்டு வேலை கிடைத்தது.
வருடாந்திர பட்டதாரிகள் வேலைவாய்ப்பு ஆய்வில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

