முடக்கப்பட்டுள்ள எஸ்ஜி நாசி லெமாக் உரையாடல் குழுவைப் போல சிங்கப்பூரில் உள்ள பெண்
களின் ஆபாசப் படங்கள், காணொளிகளை இணையத்தில் பகிர்ந்துகொள்ளும் வேறு உரையாடல் குழுக்கள் மீண்டும் டெலிகிராம் எனப்படும் தகவல் அனுப்பும் செயலியில் செயல்படத் தொடங்கியுள்ளன.
எம்ஆர்டி ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் படங்கள், பெண்களின் செல்ஃபி படங்கள், சீருடை அணிந்த உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவிகளின் டிக்டாக் காணொளிகள் ஆகியவற்றை இந்த உரையாடல் குழுக்கள் பகிர்ந்து வருகின்றன. பாதிப்படைந்த பெண்களின் பயனாளர் பெயர்கள் திரையில் காட்டப்படுகின்றன.
இத்தகைய ஆபாசப் படங்கள், காணொளிகளைப் பகிர்ந்துகொள்ளும் 10க்கும் மேற்பட்ட உரையாடல் குழுக்களில் பெரும்பாலானவற்றுக்கு ஏறத்தாழ 2,000 உறுப்பினர்கள் இருப்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கண்டுபிடித்துள்ளது.
சில உரையாடல் குழுக்களுக்கு 7,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த உரையாடல் குழுக்கள் 500க்கும் மேற்பட்ட படங்கள், காணொளிப் பதிவுகளைப் பகிர்ந்துள்ளன.
இந்த உரையாடல் குழுக்களுக்கு எதிராக போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உரையாடல் குழுக்களைப் பற்றி டுவிட்டர் மூலம் தமக்கு தெரியவந்ததாகவும் அவற்றுக்கு எதிராக இம்மாதம் 24ஆம் தேதியன்று போலிசில் புகார் செய்ததாகவும் சிங்கப்பூர் தேசிய பல்
கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) அரசியல் அறிவியல் துறை பட்டக்கல்வி மாணவியான 21 வயது குமாரி நிஷா ராய் கூறினார்.
குமாரி நிஷா ராய் என்யுஎஸ் வளாகத்தை மேலும் பாதுகாப்பானதாக்க செயல்படும் 'ஸ்டுடண்ட்ஸ் ஃபார் எ சேஃபர் என்யுஎஸ்' அமைப்பின் உறுப்பினராவார்.
சிங்கப்பூர் பெண்களின் ஆபாசப் படங்கள், காணொளிகளைப் பகிர்ந்துகொள்ளும் உரையாடல் குழுக்கள் டெலிகிராம் தளத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த அமைப்பு நேற்று முன்தினம் சமூக ஊடகத்தில் பதிவிட்டது.
பெண்களின் ஆபாசப் படங்கள், காணொளிகளைப் பகிர்ந்துவரும் கிட்டத்தட்ட 60 உரையாடல் குழுக்களை 20 பேருடன் சேர்ந்து குமாரி நிஷா ராய் அடையாளம் காட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இவர்கள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர். இதுவரை 30 பெண்களுடன் இவர்கள் தொடர்புகொண்டுள்ளனர்.
"மிகவும் அருவருப்பாக இருக்கிறது. பெரியவர்கள், வயது குறைவானோர் ஆகியோரின் ஆபாசப் படங்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இத்தகைய படங்கள், காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருவதைப் பாரக்கும்போது மனதிற்கு வேதனையாக உள்ளது. தங்களுடைய படங்கள் வலம் வருவது பற்றி சில பெண்களுக்குத் தெரியவில்லை. சிலர் உதவி நாடத் தயங்கினர்," என்றார் குமாரி நிஷா ராய். இத்தகைய உரையாடல் குழுக்களை முடக்க பொது மனு ஒன்றை அவர் தயாரித்து வருகிறார். நேற்றைய நிலவரப்படி அதில் 1,500க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்
இதற்கிடையே, இந்த உரையாடல் குழுக்களை அடையாளம் காண இணையப் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரியும் 21 வயது குமாரி நாஸ்நீன் அஷ்ஃபுர் உதவி வருகிறார். இதற்காக அவர் சில இரவுகளில் பின்னிரவு 3 மணி வரை வேலை செய்கிறார்.
"இந்த உரையாடல் குழுக்களால் பகிர்ந்துகொள்ளப்பட்ட படங்களில் நான்கூட இருந்திருக்கலாம். அதுபற்றி நினைக்கும்போது பயம் என்னை ஆட்கொண்டது. எனது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் படங்களாகக்கூட இருந்திருக்கலாம். எஸ்ஜி நாசி லெமாக் உரையாடல் குழு முடக்கப்பட்டபோது இத்தகைய தரக்
குறைவான செயலில் ஈடுபட எண்ணுபவர்களுக்கு அது பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைத்தேன். அது தவறு என்று இப்போது உணர்கிறேன்," என்றார் குமாரி நாஸ்நீன் அஷ்ஃபுர்.
ஆபாசப் படங்களைப் பகிர்ந்துகொண்டதற்காக 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எஸ்ஜி நாசி லெமாக் உரையாடல் குழுவைச் சேர்ந்த நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

