வேலையிடங்களில் பத்தில் நான்கு பெண்கள் பாலினப் பாகுபாட்டை எதிர்நோக்கியுள்ளனர். மாறாக பத்தில் ஓர் ஆடவருக்கு மட்டுமே அத்தகைய அனுபவம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சீனர் வர்த்தக, தொழில் சபை நடத்திய ஆய்வு மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
பாலினப் பாகுபாட்டால் பாதிப்படைந்தோரில் 12 விழுக்காட்டினர் மட்டுமே அதுகுறித்து புகார் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
புகார் செய்தவர்கள் அனைவரும் பெண்கள்.
புகார் செய்யப்பட்டதும் பாலினப் பாகுபாட்டுக்கு எதிராக தங்கள் வேலையிடத்தில் திருப்திகரமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புகார் செய்தோரில் பாதி பேர் மட்டுமே கூறினர்.
பெண்கள் தொடர்பான விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜூரோங்கில் உள்ள வர்த்தகச் சங்க மையத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங் கலந்துகொண்டார்.
இந்தக் கலந்துரையாடலின்போது ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 384 பேர் பங்கெடுத்தனர்.
அவர்களில் மூன்றில் இருவர் பெண்கள். ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 58.3 விழுக்காட்டினர் 41 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.
67.7 விழுக்காட்டினர் திருமணமானவர்கள். 82.6 விழுக்காட்டினர் பட்டதாரிகள். 80.2 விழுக்காட்டினர் முழுநேர வேலையில் இருப்பவர்கள்.
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் நிபுணர்களாகவோ அல்லது மேலாளர்களாகவோ பணிபுரிபவர்கள்.
வர்த்தகர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் சிலரும் ஆய்வில் பங்கெடுத்தனர்.
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்.
ஏறத்தாழ 35 விழுக்காட்டினர் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்.
எஞ்சியிருப்போர் அரசாங்க அமைப்புகளிலும் லாப நோக்கமற்ற அமைப்புகளிலும் வேலை செய்பவர்கள்.
பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் திறமையை மதிப்பிடும் முறையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
இத்தகைய வேலையிடக் கலாசாரத்தால் தங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை என்று ஆய்வில் பங்கெடுத்த 45 விழுக்காடு பெண்கள் கூறினர்.
மாறாக, 30 விழுக்காடு ஆண்கள் இக்கருத்தைத் தெரிவித்தனர்.
ஒரே பதவியில் இருக்கும் ஆண்களைவிட தங்களுக்குக் குறைவான சம்பளம் வழங்கப்படுவதாகவும் ஆய்வில் பங்கெடுத்த பெண்கள் கூறினர்.
இருப்பினும், வேலை தொடர்பான இலக்குகளை அடைய தங்கள் வேலையிடங்கள் போதுமான ஆதரவுகளை வழங்குவதாக பத்தில் ஆறு பெண்கள் தெரிவித்தனர்.
வேலையிடங்கள் தங்களுக்கு ஆதரவு வழங்குவதாக நான்கில் மூன்று ஆடவர்கள் கூறினர்.
ஆய்வில் பங்கெடுத்த பெண்களில் 59.1 விழுக்காட்டினர் வேலை- வாழ்க்கை சமநிலை தரும் பணிகளை விரும்புகின்றனர்.
ஒப்புநோக்க 49.6 விழுக்காடு ஆண்கள் அத்தகைய வேலையை விரும்புகின்றனர்.
51.2 விழுக்காடு ஆண்கள் தலைமை அல்லது நிர்வாகப்
பதவிகளுக்கு விருப்பம் தெரிவித்தனர்.
ஒப்புநோக்க 39.7 விழுக்காடு பெண்கள் அத்தகைய பதவிகளுக்கு விருப்பம் தெரிவித்தனர்.

