டாக்சி மோதி முதியவர் மரணம்
விபத்தில் சிக்கிய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படம்: வான்பாவ்
ஊன்றுகோலின் துணையுடன் சாலையைக் கடந்துகொண்டிருந்த 73 வயது ஆடவர் மீது டாக்சி மோதியது. அந்த முதியவரை அந்த டாக்சி ஏறத்தாழ 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் மாண்டார்.
இந்தச் சம்பவம் புளோக் 8 நார்த் பிரிட்ஜ் சாலைக்கு முன்னால் உள்ள சாலையில் நேற்று அதிகாலை 12.40 மணி அளவில் நிகழ்ந்தது. கவனக்குறைவுடன் டாக்சியை ஓட்டி முதியவருக்கு மரணம் விளைவித்த 55 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் பறிமுதல்; பொங்கோலில் ஆடவர் கைது
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 63 வயது சிங்கப்பூர் ஆடவரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கைது செய்துள்ளது.பொங்கோலில் உள்ள எஜ்ஃபீல்ட் பிளேன்ஸ் வட்டாரத்தில் அந்த ஆடவர் பிடிபட்டார். $72,000 பெறுமானமுள்ள ஐஸ், கஞ்சா ஆகிய போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் வகை போதைப்பொருளின் அளவு ஒரு வாரத்துக்கு ஏறத்தாழ 184 போதைப் புழங்கிகள் பயன்படுத்தக்கூடியது. அதே போல அதிகாரிகளிடம் சிக்கிய கஞ்சாவின் அளவு ஒரு வாரத்துக்கு ஏறத்தாழ 285 போதைப் புழங்கிகள் பயன்படுத்தக்கூடியது. கைது செய்யப்பட்ட ஆடவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
சமூக சேவை முன்னோடி
ஜீன் மார்ஷல் காலமானார்
சமூக சேவை முன்னோடியும் சிங்கப்பூரின் முன்னாள் முதல்வர் டேவிட் மார்ஷலின் மனைவியுமான ஜீன் மார்ஷல் (படம்) நேற்று முன்தினம் பிற்பகல் தமது வீட்டில் காலமானார். அவருக்கு 94 வயது. அவருக்கு நான்கு பிள்ளைகளும் ஆறு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமதி மார்ஷல் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் கடந்த மாதத்திலிருந்து பெல்மோரல் சாலையில் உள்ள தமது கொண்டோமினிய வீட்டில் படுத்த படுக்கையாக இருந்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவரது ஆக இளைய மகன் ஜோனத்தன் தெரிவித்தார். கடந்த ஆறு வாரங்களாக தமது தாயார் வலியால் வேதனைப்பட்டதாக அவர் கூறினார். காயமடைந்ததற்கு முன்பு திருமதி மார்ஷல் தினமும் 20 நிமிடங்களுக்கு நீச்சல் குளத்தில் நீந்தியதாக அவர் தெரிவித்தார். 1926ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த திருமதி மார்ஷல், 1953ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்து செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்தார். 1960ஆம் ஆண்டில் அவர் சிங்கப்பூரரானார். 1961ஆம் ஆண்டில் அவர் திரு டேவிட் மார்ஷலை மணந்தார். திருமதி மார்ஷலின் மரணத்துக்கு பிரதமர் லீ சியன் லூங் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
பாலியல் பலாத்கார முயற்சி: வழக்கு கோரும் ஆடவர்
மதுபோதையில் இருந்த பெண் பயணியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தம்மீது பதிவான குற்றச்சாட்டை எதிர்த்து முன்னாள் கிராப் ஓட்டுநர் வழக்கு விசாரணை கோரியுள்ளார். தமது காரின் பின் இருக்கையில் மதுபோதையில் இருந்த 19 வயது பெண்ணை 46 வயது டான் இயீ சின் மானபங்கம் செய்து அவரது சம்மதமின்றி பாலியல் உறவு கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது.
தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை டான் மறுத்துள்ளார். 2018ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி அதிகாலை அப்பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் பாலியல் உறவு கொள்ள முயன்றதாக போலிசாரிடம் டான் தெரிவித்தார்.

