செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
b6f376da-f99c-47ad-bb20-a784d33ada5d
-

சிங்கப்பூரில் நான்காவது மாதமாக வங்கிக் கடன் உயர்ந்தது

சிங்கப்பூரில் வங்கிக் கடன் நான்காவது மாதமாக பிப்ரவரியில் உயர்ந்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று தெரிவித்தது. வீடமைப்பு, கட்டுமானம் தொடர்பான கடன்கள் அதிகரிப்பதன் பின்னணியில் இந்த உயர்வு பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. வர்த்தகங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன், ஜனவரியுடன் ஒப்பிடுகையில் பிப்ரவரியில் 0.5% உயர்ந்து $424.76 பில்லியனாக பதிவாகியிருந்தது. கட்டட, கட்டுமானத் துறைக்கு வழங்கப்பட்ட கடன் 1.2% உயர்ந்து $152.15 பில்லியனாக பதிவானது. பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன் 0.4% அதிகரித்து $261.97 பில்லியனாக பிப்ரவரியில் பதிவாகியிருந்தது. இருப்பினும், ஆண்டு அடிப்படையில் மொத்த வங்கிக் கடன் 0.9% சரிந்துள்ளது.

எஸ்பிஎச் பங்குகள் உயர்ந்தன

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனம், அதன் பல்வேறு வர்த்தகங்களுக்கான தெரிவுகள் குறித்து உத்திபூர்வ மறுஆய்வு மேற்கொண்டிருப்பதாக அறிவித்ததை அடுத்து, நிறுவனத்தின் பங்குகள் ஓராண்டில் காணாத அளவுக்கு உயர்ந்தன. பங்குகள் 8.7% உயர்ந்து, $1.63 ஆனது. சென்ற ஏப்ரல் 3க்குப் பிறகு இதுவே ஆக அதிகம் என்று கூறப்பட்டது. பங்குகள் இவ்வாண்டு சுமார் 38% அதிகரித்துள்ளது. ஏழு ஆண்டுகளில் முதல் வருடாந்திர லாபம் இது என்று கூறப்படுகிறது. நிறுவனம் அதன் நிதியாண்டின் முதல் பாதியில் $97.9 மில்லியன் லாபம் ஈட்டியது என்றும் இது 26.1% அதிகரிப்பு என்றும் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தது. ஊடகம் அல்லாத குழுமத்தின் வர்த்தகப் பிரிவுகளில் நிலைமை மேம்பட்டதால் இந்த லாபம் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.