கொவிட்-19 நெருக்கடி காரணமாக பொருளியல் சரிவைச் சந்தித்த வசதி குறைவான நாடுகளுக்கு உதவ அனைத்துலக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதில் சிங்கப்பூரும் இணைந்து US$20.57 மில்லியன் (S$27.69 மில்லியன்) உதவ முன்வந்துள்ளது.
அனைத்துலக பண நிதியம் (ஐஎம்எஃப்) மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இருப்பினும் இதற்கு ஏப்ரல் 5ஆம் தேதி கூட இருக்கும் நாடாளு மன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டி இருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.
மூன்று நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது.
ஐஎம்எஃப்பின் பேரழிவு முறியடிப்பு மற்றும் நிவாரண அறநிதி, கொவிட்-19 நெருக்கடி சமாளிப்புத் திறன் நடவடிக்கை மற்றும் கடும் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ஏழை நாடுகளின் வளர்ச்சிக்கும் ஏழ்மை தணிப்பு நடவடிக்கைக்குமான அறநிதி - ஆகியன அந்த மூன்று நடவடிக்கைகள்.
"கொவிட்-19 கொள்ளைநோய் தொடரும் நிலையில் உலகப் பொருளியல் மீட்சியை ஆதரிப்பதில் சிங்கப்பூர் பேரார்வம் காட்டி வருகிறது.
"அனைத்துலக பண நிதியத்தின் வேண்டுகோளை ஏற்று உறுப்பு நாடுகள் பல பங்களிப்புக்கு முன்வந்துள்ளன.
"எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு உதவ எடுக்கப்படும் உலக நடவடிக்கையை ஆதரிக்கும் விதத்தில் சிங்கப்பூரின் பங்களிப்பு அமைகிறது," என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஐஎம்எஃப்பின் பேரழிவு முறியடிப்பு மற்றும் நிவாரண அறநிதிக்கு US$17.6 மில்லியன், கொவிட்-19 நெருக்கடி சமாளிப்புத் திறன் நடவடிக்கைக்கு US$2 மில்லியன் என சிங்கப்பூரின் பங்களிப்பு அமைவதாகவும் இவை ஆணையத்தின் அதிகாரபூர்வ வெளிநாட்டுகளுக்கான கையிருப்பு நிதியிலிருந்து பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடும் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ஏழை நாடுகளின் வளர்ச்சிக்கும் ஏழ்மை தணிப்பு நடவடிக்கைக்குமான அறநிதிக்கு சிங்கப்பூர் US$970,000 கொடுத்து உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோமாலியாவுக்கான ஐஎம்எஃப்பின் US$344 மில்லியன் நிதி நிவாரணத் தொகுப்பு நடவடிக்கைக்கு இந்நிதி கைகொடுக்கும்.
இதற்கான நிதி, ஆணையத்தின் அதிகாரபூர்வ வெளிநாட்டுகளுக்கான கையிருப்பு நிதியில் இருந்து பெறப்படாது. அதற்குப் பதில், இதர ஐஎம்எஃப்பின் கணக்கு களின் தற்போதைய வளங்களிலி ருந்து பெறப்படும் என்று தெரிகிறது.
சோமாலியாவின் நெடுநாள் கடனைத் தீர்க்க ஐஎம்எஃப் அவசர உதவி நாடியதாக ஆணையம் கூறி உள்ளது.
கொவிட்-19 நெருக்கடியால் வசதிகுறைந்த நாடுகள் பரிதவிப்பு

