நாடாளுமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான கேள்விகள் தாக்கல்

நாடாளுமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான கேள்விகள் தாக்கல்

1 mins read
4f14f58d-c7e3-4381-8d7d-e0798167fd56
-

சிங்கப்பூரின் கொவிட்-19 தடுப்பூசி செயல்திட்டம் பற்றிய பல கேள்விகள் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கலாகும். மின்னிலக்க தடுப்பூசிக் கடப்பிதழ், தடுப்பூசிக்கான இதர முன்னுரிமை குழுக்கள் பரிசீலிக்கப்படுமா ஆகிய கேள்விகளும் அவற்றில் அடங்கும்.

ஏப்ரல் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தில் அஞ்சல் சேவை (திருத்த மசோதா) தாக்கலாகும். தேசிய சரக்குப் பெட்டகக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை இந்த மசோதா அதிகாரிகளுக்கு வழங்குகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழி பதிலுக்காக 103 கேள்விகளைத் தாக்கல் செய்து இருக்கிறார்கள் என்று நாடாளுமன்ற ஆவணம் தெரிவிக்கிறது. அவற்றில் 16 கேள்விகள் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பானவை.

சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச்சீட்டுப் பயன்பாடு; அவற்றின் காலக்கெடு நீட்டிக்கப்படுமா; கொவிட்-19 காரணமாக தாமதமடையக்கூடிய பிடிஓ வீட்டுத் திட்டங்கள் தொடர்பான கேள்விகளும் தாக்கலாகியுள்ளன.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவும் அனைத்துலக முயற்சிகளுக்கு உறுதுணையாக மொத்தம் US$20.57 மில்லியன் (S$27.7 மில்லியன்) தொகையை அங்கீகரிக்கும்படி நாடாளுமன்றம் கேட்டுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.