தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக: விலை 2.8% கூடியது; $1 மில்லியன் வீடுகள் 53 விற்பனை

3 mins read
681a0334-5e04-478f-8eea-986415489f44
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிகரித்தது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரைப்பட்ட மூன்று மாதங்களில், முந்தைய காலாண்டைவிட விலைகள் 2.8 விழுக்காடு கூடியதாக கழகத்தின் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுக்காண்டு அடிப்படையில் பார்க்கையில் மறுவிற்பனை வீட்டு விலை 8 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது.

சென்ற காலாண்டில் நிலவிய வீவகவின் மறுவிற்பனை வீட்டு விலை 2013 இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5 விழுக்காடுதான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது என்று 'ஆரஞ்ச் டீ & டை' நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுப் பிரிவின் துணைத் தலைவி திருவாட்டி கிறிஸ்டைன் சன் தெரிவிக்கிறார்.

இப்போதைய விலை உயர்வின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் புதிய உச்சம் சாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

வீவக மறுவிற்பனை விலை 2019 பிற்பாதியில் இருந்து மீட்சியடையத் தொடங்கியது. அதற்கு முன் 2013 முதல் 2018 வரை தொடர்ந்து ஆறாண்டு காலமாக விலைகள் குறைந்து வந்தன. 2021 ஜனவரி முதல் மார்ச் வரைப்பட்ட காலத்தில் 26 வீவக நகர்களில் 22ல் சராசரி விலை காலாண்டு அடிப்படையில் கூடி இருக்கின்றன என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருவதாகவும் அவர் கூறுகிறார்.

இது ஒருபுறம் இருக்க, 2021ல் மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள வீவக வீடுகள் விற்பனையில் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படும் வாய்ப்புள்ளதாகவும் திருவாட்டி சன் தெரிவித்துள்ளார்.

முதல் காலாண்டில் குறைந்தபட்சம் $1 மில்லியன் விலையுள்ள 53 மறுவிற்பனை வீடுகள் கைமாறி உள்ளன. இது 1990க்குப் பிறகு மிகப் பெரிய சாதனை என்று அவர் கூறினார். 2018 ஆண்டு முழுவதும் விற்பனையான மொத்த மில்லியன் வெள்ளி வீடுகளின் அளவைவிட இந்த எண்ணிக்கை அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஒட்டுமொத்தமாக சந்தை மேம்படுவதைக் கருத்தில் கொண்டு வீவக வீட்டு உரிமையாளர்களில் சிலர், தங்கள் வீடுகளை விற்றுவிட்டு தனியார் வீடுகளை வாங்க இது சரியான நேரம் என்று கருதக்கூடும் என்று 'புராப்நெக்ஸ்' என்ற சொத்து முகவர்கள் நிறுவனத்தின் ஆய்வுத் துறைத் தலைவர் திருவாட்டி வோங் சியூ யிங் கூறினார்.

அதோடு, 25,000க்கும் மேற்பட்ட வீவக வீடுகள் இந்த ஆண்டில் குறைந்தபட்ச ஐந்தாண்டு குடியிருப்புக் கால வரம்பை எட்டும் வாய்ப்பும் இருக்கிறது. இதனைஅடுத்து அந்த வீடுகள் மறுவிற்பனைக்கு வர கதவு திறக்கப்படும்.

இந்த ஆண்டு முழுவதற்கும் வீவக மறுவிற்பனை விலை 4 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரை கூடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக புராப்நெக்ஸ் முன்னுரைக்கிறது.

இதனிடையே, 8,700 பிடிஓ வீடுகள் விற்பனை பற்றியும் நேற்று வீவக அறிவித்தது. அவற்றில் 3,800 வீடுகள் மே மாதம் விற்பனைக்கு வரும். புக்கிட் மேரா, கேலாங், தெங்கா, உட்லண்ட்ஸ் ஆகியவற்றில் அந்த வீடுகள் அமைந்திருக்கும். ஹவ்காங், ஜூரோங் ஈஸ்ட், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெம்பனிஸ் ஆகியவற்றில் மேலும் 4,900 வீடுகள் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்குக் கொடுக்கப்படும்.

இந்த வீடுகள் பற்றிய மேல் விவரங்களுக்கு HDB InfoWEB இணையத் தளத்தை நாடலாம்.

வீடுகளுக்கான பதிவு, முதலில் வருவோருக்கு முதல் சலுகை என்ற அடிப்படையில் இருக்கும் என்றும் கழகம் தெரிவித்துள்ளது.