உல்லாசக் கப்பல் பயணங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்ற நவம்பர் மாதத்திலிருந்து முன்னோட்டத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி கப்பல் பயணங்களின்போது கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் ஏதும் பதிவாகாமல் இதுவரை 120,000க்கும் மேற்பட்டோர் உல்லாசக் கப்பல்களில் பயணம் செய்துள்ளதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்காக இம்முன்னோட்டத் திட்டம் தொடங்கப்பட்டது. கடுமையான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உல்லாசக் கப்பல் நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டதாக கழகம் கூறியது.
சிங்கப்பூரின் 'குரூஸ்சேஃப்' தரக் குறியீடுகள், உல்லாசக் கப்பல் பங்காளிகளுக்குத் தெளிவான ஓர் அளவீட்டைக் குறித்துள்ளது. இதனால் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதாரக் கட்டுப்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதை பங்காளிகளும் விடாது உறுதிசெய்கின்றன என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தனது 'குவாண்டம் ஆஃப் தி சீஸ்' உல்லாசக் கப்பல் பயணங்களை இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கவிருப்பதாக 'ராயல் கரீபியன் இன்டர்நேஷனல்' நேற்று அறிவித்தது. இதுவரை பயணங்கள் தொடர்பில் அமோக வரவேற்பு நிறுவனத்திற்குக் கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதன் முதல் பயணத்தை சென்ற டிசம்பரில் துவங்கியது முதல் ராயல் கரீபியன், 30க்கும் மேற்பட்ட கடல் பயணங்களை முடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.
இவ்வாறு ராயல் கரீபியன் மூலம் 50,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்ட நிறுவனத்தின் தலைவர் திரு மைக்கல் பேலி, பாதுகாப்பான முறையில் மறக்க முடியாத உல்லாசக் கப்பல் பயண அனுபவங்களாக அவை அமையும் என்றும் உறுதி கூறினார்.
ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் மற்றும் ஜென்டிங் குரூஸ் லைன்ஸ், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் 'குரூஸ்சேஃப்' வழிகாட்டிகளுக்கு உட்பட்டு மகிழ்உலா கப்பல் பயணங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கப்பல் 50% மனிதவளத்துடன் இயங்குவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொற்று ஏற்படும் சூழல்களில் மேற்கொள்ளக்கூடிய நெறிமுறைகள் ஆகியவற்றை அவை கடைப்பிடிக்க வேண்டும்.
கப்பல்களில் ஏறுவதற்கு முன் பயணிகள் கட்டாய கொவிட்-19 பரிசோதனையைச் செய்திருக்க வேண்டும். தொடர்புகளின் தடமறியும் பணிகளுக்காக 'டிரேஸ்டுகெதர்' பயன்பாடும் அவசியம்.
பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது, குழுக்களிடையே தொடர்பு இல்லாதிருப்பது போன்ற அம்சங்களும் கப்பல் பயணங்களின்போது பின்பற்றப்படவேண்டும்.