'ஹைவ்' (Vhive) என்ற உள்ளூர் அறைகலன் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் கணினியில் ஊடுருவப்பட்டு வாடிக்கையாளர்களிள் தகவல்கள் கசிந்து இருக்கின்றன.
தொலைபேசி எண்கள், முகவரிகள் வெளியாகி இருப்பது பற்றி அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பில் புகார் தாக்கலாகி இருப்பதாக போலிஸ் பேச்சாளர் உறுதிபடக் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று தெரிவித்தது.
தன்னுடைய கணினித் தகவல் சேமிப்பு முறையில் மார்ச் 23ஆம் தேதி சட்டவிரோத ஊடுருவல் இடம்பெற்றதாக ஹைவ் நிறுவனம் மார்ச் 29ஆம் தேதி ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. அது பற்றி போலிஸ் உள்ளிட்ட பல தரப்புகளுடன் தான் செயல்பட்டு வருவதாகவும் அது கூறியது.
வாடிக்கையாளர்களின் பெயர்களும் அவர்களின் முகவரிகளும் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண்களும் வெளியே கசிந்துவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. இருந்தாலும் வாடிக்கையாளர்களின் நிதி தொடர்பான தகவல்கள், அடையாள எண்கள் எதுவும் அம்பலமாகவில்லை என்றும் அது கூறியது.
ஹைவ் நிறுவனத்தில் பொருட்களை வாங்கியதன் தொடர்பிலான நிதிப் பதிவுகள் அனைத்தும் வேறு ஒரு கணினியில் இருந்ததாகவும் அந்தக் கணினி ஊடுருவப்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்திற்காக மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொண்ட நிறுவனம், உடனடி உதவி தேவை எனில் உதவ தாங்கள் தயாராக இருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தச் சட்டவிரோத ஊடுருவலுக்குத் தானே பொறுப்பு என்று 'ஆல்டோஸ்' என்ற ஊடுருவல் குழுமம் தெரிவித்தது. இது பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் செயல்படுகிறது.
ஒன்பது நாட்களில் மூன்று தடவை ஹைவ் நிறுவன கணினிக்குள் தான் நுழைந்ததாகவும் 300,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்பான தகவல்களைத் திருடிவிட்டதாகவும் ஏறக்குறைய 600,000 பட்டுவாடா பதிவுகளைக் கைப்பற்றிவிட்டதாகவும் அந்தக் குழுமம் தெரிவித்தது.
ஹைவ் நிறுவனத்திற்குத் தான் பிறப்பித்துள்ள கோரிக்கைகளை அந்த நிர்வாகம் நிறைவேற்றும் வகையில் நாள்தோறும் 20,000 வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியிடப்போவதாகவும் அது கூறி உள்ளது.
இதனிடையே, வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி பல பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தான் செய்து வருவதாக ஹைவ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதி கூறியது.

