தேசிய ஆர்க்கிட் பூங்காவில் உள்ள செம்ப்கார்ப் கூல் ஹவுஸ் எனும் இடத்துக்குச் செல்லும் வருகையாளர்கள் மேகக் காட்டுக்குள் சென்றதைப் போன்ற உணர்வைப் பெறுவார்கள்.
அங்குள்ள குளிந்த காற்று, நீர்வீழ்ச்சி மற்றும் உலகெங்கும் காணப்படும் ஆர்க்கிட் மலர்கள் ஆகியவை பார்ப்போர் மனதைக் கொள்ளை கொள்ளும்.
தேசிய ஆர்க்கிட் பூங்காவில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் வெப்பமண்டல மேகக் காடு ஆர்க்கிட் மலர்கள் காட்சியகத்தின் அங்குள்ள கவரும் இடங்களில் மிகப் பிரபலமானது.
அந்த ஆர்க்கிட் மலர்கள் காட்சியகத்தை பிரதமர் லீ சியன் லூங் நேற்று திறந்து வைத்தார்.
தேசிய பூங்காக் கழகம் 2017ஆம் ஆண்டிலிருந்து தேசிய ஆர்க்கிட் பூங்காவில் $35 மில்லியன் செலவில் பெருமளவிலான மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது.
மறுசீரமைப்புப் பணிகள் 2019ல் நிறைவடைவதாக இருந்தது. ஆனால் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக ஏற்பட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சவால்களால் அவை தாமத மடைந்தன.
மலைப் பகுதிகளில் உள்ள மேகக் காடுகளில் உள்ள நிலப்பரப்பை போன்று தேசிய ஆர்க்கிட் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய சுற்றுப்புறத்தை சிங்கப்பூருக்கு வெகு தொலைவில்தான் காண முடியும்.
ஆர்க்கிட் காட்சியகத்தில் மூன்று கூடங்கள் உள்ளன. அவை 'த செம்ப்கார்ப் கூல் ஹவுஸ்', 'யுவென் பெங் மெக்நீஸ் கலெக்ஷன்ஸ்' மற்றும் 'டான் ஹூன் சியாங் மிஸ்ட் ஹவுஸ்'. இவை மூன்றின் பரப்பளவும் அதிகமாக்கப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு, 'த செம்ப்கார்ப் கூல் ஹவுஸ்' கூடத்தில் 1,000 முதல் 2,000 மீட்டர் உயரமுள்ள மேகக் காடுகளில் காணப்படும் செடிகள் உண்டு. அந்தக் கூடத்தின் வெப்பநிலை 16 டிகிரி செல்சியசுக்கும் 23 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டதாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
தேசிய ஆர்க்கிட் பூங்காவுக்குச் செல்ல சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போர் உட்பட சிங்கப்பூரில் வசிக்கும் மற்றவர்களுக்கு இம்மாதம் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அனுமதி இலவசம்.
நேற்றைய நிகழ்வில் பங்கேற்ற தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, "இந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்புத் திட்டங்கள் மூலம் தேசிய பூங்காக் கழகம் தனது ஆர்க்கிட் வளர்ப்பு, பழமைப் பாதுகாப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றின் ஆற்றல்களை விரிவாக்கிக் கொள்ள முடியும் என்பதால் அதனால் சிங்கப்பூரும் உலக நாடுகளும் பயனடைய முடியும்.
"உலகளாவிய பல்லுயிர் பழமைப் பாதுகாப்பு முயற்சிகளில் சிங்கப்பூரும் ஆக்ககரமான பங்களிப்பை ஆற்ற முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு," என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் பூமலைக் குழுமத்தின் இயக்குநர் டாக்டர் டான் புவே யோக், "இப்போது இங்குள்ள ஊழியர்களுக்கு அதிக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஓர் ஆர்க்கிட் செடி முழுமையாக வளர்வதற்கு சில காலம் பிடிக்கும். பின்னர் அந்தச் செடிகளில் எவ்வாறு மலர்கள் பூக்கின்றன என்பதைக் கண்காணிக்க வேண்டும். அந்த முறை நிலைப்படவும் சில காலம் ஆகலாம்," என்றார்.

