ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் நீரிழிவு நோயாளிகளுக்கென புதிய வழிகாட்டி ஒன்றை லாப நோக்கமற்ற அமைப்பான 'டயபிட்டிஸ் சிங்கப்பூர்' வெளியிட்டுள்ளது.
நோன்பு இருக்கும்போது இக்குறிப்பிட்ட பிரிவினருக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். அவர்களின் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் சாத்தியமும் உண்டு; சரியும் அபாயமும் உண்டு. எனவே, இவ்வழிகாட்டி அவர்களுக்குத் தேவையான தகவல்களை அறிவுறுத்தும்.
ஆங்கிலம், மலாய் மொழிகளில் அமைந்துள்ள இந்த வழிகாட்டி, அனைத்து பள்ளிவாசல்களிலும் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டது. நீரிழிவு நோயாளிகளில் சுமார் 14.4 விழுக்காட்டினர் மலாய் இனத்தவர். அதற்கு அடுத்த நிலையில் 14.2 விழுக்காட்டினர் இந்தியர்கள். சீனர்கள் 8.2 விழுக்காட்டினர் என்று தெரிவிக்கப்பட்டது.
நீரிழிவு நோய், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய திட்டம் (செடாப்) கீழ் புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டது.
இந்த 'செடாப்' இயக்கத்தின்கீழ், அனைத்து இனத்தவருக்கும் பொருந்தும் வகுப்புகளும் உரையாடல்களும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அவற்றில் சமையல் வகுப்புகள், சுகாதாரப் பேச்சுகள் அடங்கும்.
இதற்கிடையே நீரிழிவு இருப்பதன் அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும் திட்டம் தொடர்பில் 'டயபிட்டிஸ் சிங்கப்பூர்' அமைப்பும் அஸ்ட்ராஸெனிகா நிறுவனமும் மூன்றாண்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
"நோயாளிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, ஆலோசனை வழங்கி, உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்ய உதவி, நோய் கடுமையாகாமல் தவிர்க்கலாம் என்றார் அஸ்ட்ராஸெனிகா நிறுவனத்தின் திரு வினோத் நாராயணன்.

