ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, சிங்கப்பூர் பூமலை ஆகிய மிகவும் விரும்பப்படும் பூங்காக்களில் அண்மையில் திறக்கப்பட்டு இருக்கும் புறவெளி விளையாட்டு இடங்கள் மக்களிடம் பிரபலமடைந்து வருகின்றன. ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் 'கோஸ்டல் பிளேகுரோவ்' என்ற கேளிக்கை இடமும் பூமலையில் 'கோமோ அட்வன்சர் குரோவ்' என்ற இடமும் அண்மையில் திறக்கப்பட்டன.
அவற்றின் வசதிகளை இலவசமாக மக்கள் அனுபவிக்கலாம். குளுகுளு வசதி இல்லை என்றாலும் திறந்தவெளியில் பலவற்றையும் அனுபவித்து மகிழ வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அவை மெய்ப்பிக்கின்றன. கோஸ்டல் பிளேகுரோவ் கேளிக்கை இடம் 4.5 ஹெக்டர் பரப்பளவில் குடும்பங்களைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சாப்பாட்டு இடங்கள் அங்கு ஏராளம். சிங்கப்பூரிலேயே ஆக உயரமான சறுக்கு உருளை அங்குதான் இருக்கிறது. இப்போது அந்த உருளைக்கு விளையாட்டு கோபுரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சிறார்களைப் பொறுத்தவரை நான்கு மாடி உயரத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கும் வலை விளை யாட்டு அரங்கம் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.
இயற்கை விளையாட்டுத் தோட்டமும் உண்டு. அங்கு சிறார்கள் மூங்கில் சுரங்கம் வழியாகச் சென்று பெரும் பெரும் மணற்குழிகளில் இறங்கி விளையாடலாம்.
பாலர்பள்ளி பிள்ளைகளுக்காக கடற்கரையோர புறவெளி பாட வகுப்பறையும் இருக்கிறது.
பூமலையில் அண்மையில் திறக்கப்பட்ட கோமோ அட்வன்சர் குரோவ் விளையாட்டு இடத்தை 'இயற்கை விளையாட்டுத் தோட்டம்' என்று தேசிய பூங்காக் கழகம் வர்ணிக்கிறது.
ஒரு காட்டின் நடுவே விளையாடுவது போன்ற உணர்வை அங்கு நீங்கள் பெற முடியும். சிறார்கள் சிரிக்கும் சத்தமும் புதர்களில் கோழிகள் கொக்கரிக்கும் ஓசையையும்தான் கேட்க முடியும்.
சிங்கப்பூரில் 1898ல் கட்டப்பட்ட ஆகப் பழைய கறுப்பு-வெள்ளை பங்களா வீட்டில் (காலோப் ஹவுஸ் எண் 5) உள்ள ஓசிபிசி மரத்தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் காட்டுக் கண்டுபிடிப்பு மையத்தில் சிங்கப்பூரின் காட்டு விலங்கின வாழ்வை எடுத்துக்காட்டும் காணொளிகளையும் கலந்துறவாடக் கூடிய காட்சிகளையும் காண முடியும்.
அவற்றிலிருந்து தாவரவியல் பற்றியும் வரலாற்றையும் சிறார்கள் தெரிந்துகொள்ளலாம்.