கடற்கரைக்குச் சென்ற இரண்டு பேரைத் திருக்கை மீன் கொட்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கடற்கரை சுற்றுக்காவல் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர் களுக்கு மார்ச் 28ஆம் தேதி முதலுதவி அளித்ததாக செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் பேச்சாளர் நேற்று உறுதிப்படுத்தினார்.
செந்தோசாவில் உள்ள தஞ்சோங் கடற்கரைக்கு மார்ச் 28ஆம் தேதி குடும்பத்துடன் சென்றிருந்த பெஞ்சமின் கியோல்மான் என்பவரைத் திருக்கை மீன் கடித்து விட்டது.
அதையடுத்து சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் மூன்று நாட்கள் அவர் சிகிச்சை பெற்றார். அவர் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி ஃபேஸ்புக்கில் விளக்கி இருந்தார்.
இதனிடையே, சிங்கப்பூரை சுற்றிலும் உள்ள கடற்பகுதியில் திருக்கை மீன்கள் காணப்படுவது வழமையான ஒன்றுதான் என்றும் பொதுவாக அவை சாதுவானவை என்றும் வல்லுநர்கள் கூறினர்.
பொதுவாகவே உயிரினங்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளவே தாக்குதலில் ஈடுபடும் என்று லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சிக் கூடத்தைச் சேர்ந்த டாக்டர் டான் ஹியோக் ஹுய் என்ற வல்லுநர் கூறினார்.
திருக்கை மீன்கள் சதுப்பு நிலம் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் பவளப்பாறை மற்றும் ஆழ்கடல் பகுதிகளிலும் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. திருக்கை மீன்பொதுவாக அமைதியானது என்றும் அதற்குத் தொல்லை கொடுத்தாலொழிய அது யாரையும் தாக்காது என்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியல் வல்லுநர் ஹுவாங் டான்வெய் கூறினார்.
ஆகையால் கடலில் இறங்கும்போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருக்கை மீன்கள் பதுங்கி இருக்கக்கூடிய இடங்களை அவர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

