குடல், வயிறு, சினைப்பை புற்றுநோய் கண்ட நோயாளிகளுக்கு புற்றுநோய்க் கட்டிகளைக் குறிவைத்து செய்யப்படும் ரசாயன சிகிச்சை முறை நோயின் இறுதிக்கட்டத்தில் இருப்போருக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
'பிபாக்' எனப்படும் 'பிரஷரைஸ்டு இன்ட்ராபெரிடோனியல் ஏரோசல் கீமோதெரபி' முறையில் மருந்துகள் 'ஏரோசல்' வடிவத்தில் குழாய் வழியாக அடிவயிற்றிலேயே நேரடியாகச் செலுத்தப்படுகின்றன.
வழக்கமான கீமோதெரபி சிகிச்சையுடன் ஒப்பிடும்போது இந்தப் புதிய முறை குறைவான பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதுடன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக புற்றுநோய்க் கழகம் ஆகியவற்றில் வெற்றிகரமாக அறிமுகமும் செய்யப்பட்டுள்ளன.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் இதுவரை 31 நோயாளிகளுக்கு 49 தடவை 'பிபாக்' சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெரும்பாலும் வயிறு மற்றும் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
இந்த சிகிச்சை மூலம் கிட்டத்தட்ட 60% நோயாளிகளின் புற்றுக் கட்டியின் அளவு குறைந்தது. சிலருக்கு நோய் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் இந்த சிகிச்சை முறை மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

