புளோக் 143 லோரோங் 2 தோ பாயோவில் கடந்த சனிக்கிழமை இரவு பதின்ம வயதுப் பெண்கள் இருவர் மாண்டுகிடந்தனர்.
இந்த இயற்கைக்கு மாறான மரணம் குறித்து அன்று இரவு 10.02 மணிக்கு போலிசுக்கு தகவல் கிடைத்தது.
புளோக்கின் கீழ்த்தளத்தில் 15, 16 வயதுகளில் இரு பெண்கள் அசைவின்றிக் கிடந்தனர். அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
அவர்களின் மரணத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.
அந்த புளோக்கில் வசிக்கும் திரு ஸாங் என்பவர், தாம் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது அந்த புளோக்கின் கீழ்த்தளத்தில் போலிஸ் அதிகாரிகள் இருந்
ததைக் கண்டதாக வான்பாவ் சீன நாளிதழிடம் கூறினார்.
"உயிரிழந்தவர்களில் ஒருவர் கறுப்புநிற டீ-சட்டையும் ஜீன்ஸ் காற்சட்டையும் அணிந்திருந்தார். அவரது தலையைச் சுற்றி ரத்தம் வெள்ளம்போல் காணப்பட்டது," என்றார் திரு ஸாங், 40.
உயிரிழந்த அவ்விரு பெண்களும் நெருங்கிய நண்பர்கள் என்றும் அந்த புளோக்கில் இருந்து அவ்விருவரும் ஒரே நேரத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
அவ்விருவரும் ஒரே மாதிரியான கையணிகளை (பிரேஸ்லட்) அணிந்திருந்தனர்.
அந்த அணிகலன்களை போலிசார் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
மாண்ட இளம்பெண்களின் சடலங்கள் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் அகற்றப்பட்டதாக வான்பாவ் நாளிதழ் தெரிவித்தது.
உதவி தேவைப்படுவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை நாடலாம்:
சமாரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்: 18002214444
சிங்கப்பூர் மனநலக் கழகம்: 18002837019
சில்வர் ரிப்பன்: 63861928
டிங்கிள் ஃபிரண்ட்: 18002744788