ஜூரோங் வட்டாரப் பாதையில் நான்கு ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்
ஜூரோங் வட்டாரப் பாதையில் அமையும் மேலும் நான்கு எம்ஆர்டி ரயில் நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடப்புக் காலாண்டில் தொடங்கவுள்ளன.
அந்நான்கு நிலையங்களும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் ஜூரோங் நகராண்மைக் கழக தொழிலகப் பகுதிக்குச் சேவையாற்றும்.
இதன் தொடர்பில் தலா $263 மில்லியன் மதிப்பிலான இரு ஒப்பந்தங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று வழங்கியது. நான்கு ரயில் நிலையங்களின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய மேம்பாலச் சாலைப் பணிகளை அந்த ஒப்பந்தங்கள் உள்ளடக்கியுள்ளன.
ஜூரோங் வட்டாரப் பாதையின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக அந்நிலையங்கள் அமைய இருக்கின்றன. ஜூரோங் வட்டாரப் பாதையின் மூன்றாம் கட்டப் பணிகள் வரும் 2029ஆம் ஆண்டில் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூரோங் ஹில், ஜூரோங் பியர் எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு நிலையங்கள், ஜூரோங் பியர் சாலையைச் சுற்றி இருக்கும் தொழிலகப் பகுதிக்கு சேவையாற்றும். நன்யாங் கேட்வே, நன்யாங் கிரசென்ட் எனும் மற்ற இரு நிலையங்களும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமையும்.
கட்டி முடிக்கப்பட்டதும் அந்த நான்கு புதிய நிலையங்களால் பயணிகளின் பயண நேரம் 30 நிமிடம் வரை குறையலாம்.
ஜூரோங் ஹில், ஜூரோங் பியர் நிலையங்கள், ஜூரோங் பியர் சாலையின் வழியே அவ்விரு நிலையங்களுக்கு இடையே அமையும் 1.1 கி.மீ. நீள மேம்பாலச் சாலை ஆகியவற்றுக்கான ஒப்பந்தம், சிங்கப்பூரின் 'எஸ்சிபி கட்டுமான நிறுவனம்' மற்றும் 'சீனக் கட்டடப் பொறியியல் கட்டுமான நிறுவனம் (சிங்கப்பூர் கிளை)' ஆகியவற்றின் கூட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒப்பந்தமானது நன்யாங் கேட்வே, நன்யாங் கிரசென்ட் நிலையங்கள் மற்றும் அவற்றுக்கு இடையிலான 1.4 கி.மீ. மேம்பாலச் சாலை ஆகியவற்றை உள்ளடக்குகிறது. அந்த ஒப்பந்தம் 'ஹுவே செங் பில்டர்' எனும் உள்ளூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக ஜூரோங் வட்டாரப் பாதை கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் தாமதமானது. அப்பாதை 2027ஆம் ஆண்டில் இருந்து 2029க்குள் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்.
சிங்கப்பூரின் ஏழாவது எம்ஆர்டி பாதையான ஜூரோங் வட்டாரப் பாதை நிலத்தடி ரயில் நிலையங்களையே கொண்டிராது.
பணிகள் நிறைவடைந்தபின் அப்பாதை 24 நிலையங்களையும் சுவா சூ காங், பூன் லே, ஜூரோங் ஈஸ்ட் ஆகிய மூன்று நிலையங்களில் சந்திப்பு நிலையங்களையும் கொண்டிருக்கும்.

