அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'டிஜிட்டல் ரியால்ட்டி' நிறுவனம், சிங்கப்பூரில் தனது மூன்றாவது, ஆகப் பெரிய தரவு மையத்தைத் திறந்துள்ளது.
டிஜிட்டல் லோயாங் II அல்லது SIN12 என அழைக்கப்படும் அந்த ஐந்து தள, 50 மெகாவாட் மையம், கட்டட, கட்டுமான ஆணையத்தின் பசுமைக் குறியீடு பிளாட்டினச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
மெய்நிகர் முறையில் நேற்று நடைபெற்ற அந்தத் தரவு மையத் திறப்புவிழா நிகழ்வில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார்.
மின்னிலக்கப் பொருளியல் வளர்ந்து வரும் நிலையில், தனது மின்னிலக்கக் கட்டமைப்பு முடிந்த அளவிற்குச் சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்து நிலைத்திருப்பதைச் சிங்கப்பூர் உறுதிசெய்வது முக்கியம் என்று அமைச்சர் லீ கூறினார்.
'டிஜிட்டல் ரியால்ட்டி' நிறுவனத்தின் மூன்றாவது தரவு மையம், அறிவார்ந்த முறையிலும் மீள்திறன் கொண்டதாகவும் கட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தரவு மையத் துறை வெகுவேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில், மொத்தம் 768 மெகாவாட் தகவல் தொழில்நுட்பக் கொள்திறனுடன் கூடிய 14 தரவு மையங்களைக் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.