மக்கள் செயல் கட்சியின் (மசெக) '4ஜி' தலைவர்கள் குழுவின் தலைமைப் பதவியிலிருந்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் விலகியதைத் தொடர்ந்து அடுத்த தலைமைத்துவம் குறித்து ஒட்டுமொத்தமாகப் பரிசீலிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த செயல்முறை யார் சிறந்தவர் என்பதற்கு அப்பாற்பட்டது. தனித்தனி அங்கமாகச் செயல்படுவதைத் தாண்டி, ஒரு குழுவாக சிறந்து செயல்படுவதை உறுதி செய்யும் சிறந்த தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமென மசெக தலைவர்கள் வலியுறுத்தினர்.
கட்சியின் இரண்டாவது இரண்டாம் தலைமைச் செயலாளராகவும் துணைப் பிரதமர் ஹெங்கிற்கு அடுத்தநிலையிலும் உள்ள நீங்கள் அடுத்த தலைவராக வருவீர்களா என்று நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு திரு சான் இவ்வாறு பதிலளித்தார்.
அடுத்த தலைவர் ஏக மனதாக காலப்போக்கில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறிய திரு சான், எங்களது தலைமைத்துவத் தேர்வுத் திட்டம், தலைவர் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுப்பதையும் தாண்டி, சிங்கப்பூர் வலுவான ஒரு குழுவைக் கண்டறிவதில் உள்ளது என்றார்.
இதனால் சிங்கப்பூர் சவால்களை எதிர்கொண்டு, உயிர்வாழ்வது மட்டுமல்லாது செழிப்பான வளர்ச்சி காண்பதற்கும் சிறந்த வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
தலைமைத்துவப் பதவிக்கு தகுதியானவர் குறித்த கேள்விக்குப் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங்கும், இது ஒரு தலைவரை மட்டுமே தேர்ந்தெடுப்பதல்ல என்ற திரு சானின் கருத்தையே பிரதிபலித்தார். தலைமைத்துவக் குழு எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை அடிப்படையில் பார்ப்பது மசெக வழி என்று திரு ஓங் கூறினார்.
"வழக்கமான பந்தயத்திலிருந்து இது வேறுபட்டது. முடிவில், கழுத்தில் ஒரு பதக்கத்துடன் ஒரே ஒரு வெற்றியாளர் மட்டுமே மேடையில் இருப்பார். இது ஒரு குழு எனும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் களத்தில் பணியாற்றுவதாகும். இதில் வெற்றிபெற்றால், நாட்டுக்கு பெருமை கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு குழுவின் தலைவராக இருப்பவர், அணியில் இருப்பவர் ஒவ்வொருவரது செயல்திறனை வெளிக்கொணர்வார்," என்றார் திரு ஓங்.
"எனவே ஒரு வலுவான அணியை உருவாக்குவதற்கு, அதில் முதன்மையாக விளங்குபவர் பின்னால் அணிவகுப்பதற்கும் சிறிது காலம் எடுக்கும். இப்போதுதான் ஒரு பெரிய மாற்றத்தை அறிந்துள்ளோம். எனவே மீண்டும் ஒருங்கிணைக்க எங்களுக்கு சிறிது காலம் தேவை. இதில் உங்கள் புரிந்துணர்வையும் ஆதரவையும் நாடுகிறோம்," என்று அமைச்சர் ஓங் கூறினார். கொவிட்-19 தொற்றிலிருந்து சிங்கப்பூர் வலுவுடன் மீண்டு வருவதை உறுதி செய்வதில் நான்காம் தலைமைத்துவக் குழு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று திரு சான் கூறினார்.
"எங்களுக்கு எவ்வாறு சொல்லித்தரப்பட்டதோ, எவ்வாறு விளக்கிக் கூறப்பட்டதோ, முந்தைய தலைமுறை தலைவர்கள் அனைவரும் முன்னுதாரணமாக இருந்தார்களோ அதேபோல், எந்தவொரு முடிவை எடுப்பதிலும் குழுவில் உள்ள அனைவரும் தொடர்ந்து சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களின் நலன்களுக்குமே முக்கியத்துவம் கொடுப்போம்," என்று அவர் கூறினார்.

