செர்ட்டிஸ் பாதுகாப்பு நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக உள்ள பொதுமக்கள், வர்த்தகங்களின் 62,000 மின்னஞ்சல்களை இணைய வஞ்சகர்கள் ஊடுருவி இருக்கலாம் என செர்ட்டிஸ் கூறி உள்ளது.
அடையாள அட்டை எண், கடன்பற்று அட்டை எண் போன்ற விவரங்கள் சில மின்னஞ்சல்களில் இடம்பெற்றிருந்ததாகவும் அது நேற்று தெரிவித்தது. எல்லா மின்னஞ்சல்களும் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரே வாடிக்கையாளர் சேவை கணக்கிலிருந்து வந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. அவற்றை செர்ட்டிஸ் ஸ்கேன் செய்து சோதித்தபோது 1.2 விழுக்காட்டு மின்னஞ்சல்களில் அடையாள அட்டை எண்கள், கடன்பற்று அட்டை எண்கள் போன்ற முக்கிய தகவல்கள் அடங்கி இருந்தன.
அந்தக் குறிப்பிட்ட கணக்கிலிருந்து ஏராளமானோருக்கு அந்த ஊடுருவப்பட்ட மின்னஞ்சல்கள் சென்றதைத் தொடர்ந்து அச்சம்பவம் குறித்து தெரிய வந்ததாக செர்ட்டிஸ் குறிப்பிட்டது. மார்ச் 16, 17 தேதிகளில் அந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மின்னஞ்சல்களை இணையக் குற்றவாளிகள் ஊடுருவியபோதிலும் செர்ட்டிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தரவுத்தளம் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
"எங்கள் தகவல் தொழில்நுட்பக் குழு உடனடியாக விசாரணையில் இறங்கியது. இறுதியில், இச்சம்பவம் அரி தான ஒன்று என்ற முடிவுக்கு வந்தோம்," என செர்ட்டிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

