தீவு விரைவுச்சாலையில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மேம்பாலம் கடந்த 2017ஆம் ஆண்டில் இடிந்த வழக்கில், கட்டுமான நிறுவனத்துக்கு அதிகபட்சமாக $1 மில்லியன் அபராதம் விதிக்கும்படி அரசுத் தரப்பு மாவட்ட நீதிமன்றத்தை நேற்று கேட்டுக்கொண்டது.
வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின்கீழ், கட்டுமான நிறுவனம் ஒன்றின் விதி
மீறல்களுக்காக விரிவுபடுத்தப்பட்ட தண்டனையை அரசுத்தரப்பு கோருவது இதுவே முதல் முறை.
இதற்கு முன்பு மற்றொரு சம்பவத்தில் ஓகேபி நிறுவன ஊழியர் ஒருவர் விழுந்து உயிரிழந்த நிலையில், அந்த நிறுவனம் பாதுகாப்பை உறுதி செய்யாததால், மீண்டும் குற்றமிழைத்ததற்காக ஓகேபி நிறுவனத்துக்கு அதிகபட்ச தண்டனையை அரசுத்தரப்பு கோரியது.
"ஓகேபி நிறுவனம் கவனத்துடன் செயல்படாததால் பாலம் இடிந்து விழுந்தது. இதற்கு முன்பு மற்றோர் சம்பவத்தில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததால் தடையை எதிர்நோக்கிய அந்த நிறுவனம் 'பாதுகாப்புக் குறைபாடில்லாத வேலையிடத்தைக் கொண்டிருக்க' அது உறுதி அளித்திருந்தது.
"ஊழியர்களின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிக்கும் விதத்தில் பல பாதுகாப்புக் குறைபாடுகளை அந்த நிறுவனம் அதிர்ச்சியூட்டும் விதத்தில் புறக்கணித்தது," என்று குறிப்பிட்ட அரசுத்தரப்பு, நிறுவனத்தின் நடவடிக்கையை 'கண்மூடித்தனமானது' என்று குறிப்பிட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டில் இயோ சூ காங் மேம்பாலத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். அந்த விபத்தின் தொடர்பில், பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக ஓகேபி நிறுவனத்துக்கு $250,000 அபராதம் விதிக்கப்பட்ட மூன்று நாள்களுக்குப் பிறகு, அதாவது 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி தீவு விரைவுச்சாலை மேம்பால விபத்து நிகழ்ந்தது.
முந்தைய வழக்கில் ஓகேபி நிறுவனத்தின் பங்கு இந்தப் புதிய வழக்கில் இருந்து மாறுபட்டிருப்பதால் விரிவுபடுத்தப்பட்ட தண்டனையை அரசுத்தரப்பு கோர முடியாது என ஓகேபி நிறுவனத் தரப்பில் வழக்கறிஞர் வாதிட்டார்.
பாலத்தின் தற்காலிக ஆதரவுக் கட்டமைப்புகளில் விரிசல் இருப்பது தெரிந்த பிறகும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் ஊழியர்களைப் பணியாற்ற அனுமதித்த அந்தத் திட்டப் பணியின் இயக்குநர் ஈ சீ கியோங், பொறியாளர் வோங் கியூ ஹாய் ஆகியோரின் தண்டனை பற்றியும் நேற்று விவாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்; 10 பேர் காயமடைந்தனர்.

