செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
91c1d26e-3b9d-4afd-a9c5-c2ed1d01b805
-

முன்னாள் எம்பி.க்கள், கட்சியின் செயலாளர்களுடன் சந்திப்பு

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருந்த திரு ஹெங் சுவீ கியட், அதிர்ச்சி அளிக்கும் வகையில் விலகிக்கொள்ளப்போவதாக அறிவித்ததை அடுத்து மக்கள் செயல் கட்சியின் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆர்வலர்கள் ஆகியோருக்கு இடையே பல்வேறு சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

அவற்றில் கட்சியின் அரசியல் வாரிசுத் திட்டங்கள் பற்றிய பல்வேறு அம்சங்களும் விவாதிக்கப்பட்டன.

திரு ஹெங் விலகல் பற்றிய அறிவிப்பு வியாழக்கிழமை வெளியானதும் வெள்ளிக்கிழமை நடக்கும் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் இருவரும் நாடாளுமன்ற இல்லத்தில் ஏறத்தாழ 40 முதல் 50 முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் சந்தித்து அரசியல் வாரிசு பற்றி பலவற்றையும் விவாதித்ததாகவும் பல்வேறு கருத்துகளைச் செவிமடுத்ததாகவும் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நியூ அப்பர் சாங்கி ரோட்டில் இருக்கும் மக்கள் செயல் கட்சித் தலைமையகத்தில் கட்சியின் 93 கிளைகளுக்கும் தலைமை ஏற்றுள்ள மசெக கிளைச் செயலாளர்கள் கலந்துகொண்ட பிரத்தியேகக் கூட்டம் நடந்தது.

கட்சியின் இரண்டாம் உதவி தலைமைச் செயலாளரான அமைச்சர் திரு சானும் கட்சியின் பொருளாளரான அமைச்சர் திரு சண்முகமும் கட்சி தலைமைச் செயலகத்துக்குச் சென்று கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன், கிளைச் செயலாளர்களைச் சந்தித்தனர். ஸூம் மூலமான சந்திப்புகளும் நடந்தன.

'ஈராண்டுக்குள் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்'

மக்கள் செயல் கட்சி தனது 4ஆம் தலைமுறைத் தலைவரை இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று 10 சிங்கப்பூரர்களில் எட்டு பேர் கருதுகிறார்கள். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய ஆய்வு மூலம் இது தெரிய வருகிறது. துணைப் பிரதமர் திரு ஹெங் சுவீ கியட் மக்கள் செயல் கட்சியின் 4ஆம் தலைமுறைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தார். அடுத்த பிரதமராகும் பொறுப்பில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை அந்த ஆய்வு மூலம் 160 பேரின் கருத்துகள் திரட்டப்பட்டன. அரசியலின் அடுத்த வாரிசு குறித்து தாங்கள் கொஞ்சம் கவலை அடைவதாக ஏறத்தாழ பாதிப்பேர் தெரிவித்தனர்.

அடுத்த தலைமுறைத் தலைவரை ஓராண்டுக்குள் தேர்ந்து எடுத்துவிட வேண்டும் என்று 10 பேரில் நால்வரும் இதற்கான கால அளவு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் என்று அதே அளவினரும் கூறினர். ஏறத்தாழ 13 விழுக்காட்டினர், இரண்டு முதல் நான்கு ஆண்டு களுக்குள் தலைவர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் மற்றவர்கள் இதில் அவசரம் வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்தனர். பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்ள திரு ஹெங் தெரிவித்த கருத்துகள் பற்றி கேட்டபோது ஆய்வில் கலந்துகொண்டவர்கள் அப்படியும் இப்படியுமாகக் கருத்து கூறினர்.