இப்போதைய மாணவர்கள் இளம் வயதிலேயே மின்னிலக்க நிரலிடுதல் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் மரபணு நிரலிடுதல் பற்றியும் கற்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'எஸ்ஜி புத்தாக்கம்' இயக்கத்தின் மெய்நிகர் வாழ்க்கைத் தொழில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 'புதிய களம்: உங்களுடைய எதிர்கால உயர் தொழில்நுட்பங்களைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற தலைப்பிலான அந்த வாழ்க்கைத் தொழில் காட்சியைத் தொடங்கி வைத்து கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார்.
மரபணு நிரலிடுதல் போன்ற உயர் தொழில்நுட்பங்கள் புதிய புத்தாக்கங்களில் முன்னணியில் திகழ்கின்றன என்றார் அமைச்சர்.
உயிரியல் தொழில்நுட்பம், கணினி நிரலிடுதல், பொறியியல் போன்ற துறைகளில் இடம்பெறக்கூடிய ஆகப் புதிய புத்தாக்க தொழில்நுட்பங்கள் எதிர்காலத்திற்கு மிக அவசியம் என்று கருதப்படுகிறது.
இயந்திர மனிதர்கள், மரபணு மாற்றங்கள், கணினித் தகவல் தொகுப்பு போன்ற புத்தாக்கங்கள் இந்தத் துறைகளைத் தழுவியவையாக இருக்கின்றன.
மனிதகுலத்திற்கு மிக முக்கிய அடிப்படை அம்சங்களான அணு, கணினி இலக்கம் (Bit), மரபணு ஆகிய மூன்றையும் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், அவற்றில் அணு, கணினி இலக்கம் இரண்டும் ஏற்கெனவே பல புரட்சிகளைச் செய்திருப்பதைச் சுட்டினார்.
இதைத் தொடர்ந்து இப்போது நாம் உயிர் அறிவியல் புரட்சியில் நுழைகிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஆகையால் எதிர்காலத்தில் மாணவர்கள் மின்னிலக்க நிரலிடுதல் மட்டுமின்றி மரபணு நிரலிடுதல் பற்றியும் கற்பார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இத்தகைய புத்தம்புது தொழில்நுட்பங்கள் சிங்கப்பூருக்கு புதியவை என்பதைச் சுட்டிய அமைச்சர், இவை ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறினார். இத்துறைக்கு உலகிலும் சிங்கப்பூரிலும் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இத்தகைய புதிய தொழில்நுட்பங்கள் மிக முக்கியமானவையாக இருந்து வருகின்றன என்று எஸ்ஜி புத்தாக்க இயக்கத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் லிம் ஜூய் கூறினார்.
கிருமித்தொற்று சூழலில் மனிதகுலம் எதிர்நோக்கும் மிகக் கடுமையான சவால்களுக்குத் தீர்வு காண்பதில் இத்தகைய புதிய தொழில்நுட்பங்கள் கொண்டிருக்கும் ஆற்றல்களைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு மக்கள் உரிய முக்கியத்துவத்தை கொடுக்க தொடங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
எஸ்ஜி புத்தாக்க இயக்கம் தன் 'பவர்எக்ஸ்' என்ற முழுநேர பயிற்சி செயல்திட்டத்தின் கீழ் இரண்டு புதிய அம்சங்களை நேற்றைய நிகழ்ச்சியில் தொடங்கியது.
புதிய இணையப் பாதுகாப்பு மற்றும் மென்பொருள் உற்பத்திப் பொருள் மேம்பாடு என்ற அந்த இரண்டு அம்சங்களும் இந்தத் துறைகளில் அதிக தேவை இருப்பதைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்படுவதாக எஸ்ஜி புத்தாக்க இயக்கத்தின் ஆற்றல் கட்டமைப்புத் துறை நிர்வாக இயக்குநர் திருவாட்டி ஜூலியானா லிம் தெரி வித்தார்.

