அப்பர் தாம்சன் ரோட்டில் அப்பர் தாம்சன் எம்ஆர்டி நிலையம் கட்டத் திட்டமிடப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் இருக்கும் செல்லப்
பிராணி கடையில் நேற்று காலை 19 நாய்க்குட்டிகளை தீயணைப்பாளர்கள் மீட்டனர்.
புகை வெளியேறிக்கொண்டிருந்த கடையிலிருந்து பெட்டிகளில் நாய்க்குட்டிகள் வெளியில் கொண்டு வரப்பட்டதாகவும் அந்த வழியாகச் சென்றவர்கள் நாய்க்குட்டிகளைப் பராமரிக்க உதவியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
எண் 197 அப்பர் தாம்சன் ரோட்டில் தீப்பற்றியதாக நேற்று அதிகாலை 1.15 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது.
வெல்ஃபோண்ட் பெட்ஸ் எனும் செல்லப்பிராணி கடை அந்த இடத்தில் உள்ளது.
பூட்டை உடைத்து கடைக்குள் சென்ற தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
நாய்க்குட்டிகளைப் பராமரிக்க உதவியவர்களுக்கு தீயணைப்
பாளர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தில் 19 நாய்க்குட்டிகள் அந்தக் கடையிலிருந்து மீட்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. உயிரிழப்புகளோ, காயங்களோ பதிவாகவில்லை என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
அந்தக் கடைக்குள் இருந்த மின்சாதனம் ஒன்றின் காரணமாக தீ மூண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.

