கேலாங் சிராயில் நோன்புப் பெருநாள் ஒளியூட்டு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதே குதூகலத்துடன் இணையச் சந்தையும் தொடங்கிவிட்டது.
ரமலான் மாதம் வரும் 13ஆம் தேதி தொடங்கி மே 12 வரை நீடிக்கவுள்ள நிலையில் ஒளிவெள்ளமும் அலங்காரமும் மே 23 வரை இருக்கும் என்று கூறப்பட்டது.
'நம் கம்பத்து உணர்வைக் கொண்டாடுவோம்' என்ற கருப்பொருளில் இவ்வாண்டின் ஒளியூட்டு அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று ஒளியூட்டைத் தொடங்கி வைத்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், கடந்த ஆண்டு சவால்களில் இவ்வாண்டின் ஒளியூட்டு மேலும் பொருள் நிறைந்ததாகியுள்ளதாகக் கூறினார்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான மசகோஸ் ஸுல்கிஃப்லி, பிரதமர் அலுவலக அமைச்சர்கள் மாலிக்கி ஒஸ்மான் மற்றும் டான் சீ லேங் ஆகியோருடன் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னும் ஒளியூட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சிம்ஸ் அவென்யூ மற்றும் சாங்கி ரோட்டில் அமைந்துள்ள இரு பிரதான வளைவுகள், ஒளியூட்டின் மையப் பகுதிகளாக திகழ்வதாகக் கூறப்பட்டது.
விஸ்மா கேலாங் சிராய், சிங்கப்பூர் மலாய் வர்த்தக தொழில் சபையுடன் இணைந்து வருடாந்திர இணையச் சந்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
வழக்கமான தெருச்சந்தைகள், கொவிட்-19 கொள்ளைநோய் கருதி இவ்வாண்டு 'Bazaar-Kita.sg' என்ற இணையச் சந்தையாக மாறிவிட்டது.
பலகாரங்கள், உணவுவகைகள், ஆடை அணிகள் போன்றவற்றை 24 மணிநேரமும் வாங்கும் வசதியை இணையத்தளம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.