புதிய உள்துறைக்குழு என்எஸ் மனமகிழ் மன்றம் திறப்பு
காத்திப்பில் 21,000 சதுர மீட்டர் பரப்பிலான புதிய ஐந்து மாடி மனமகிழ் மன்றம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. உள்துறைக் குழு தேசிய சேவையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான அந்த நிலையத்தை சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று திறந்து வைத்தார். சறுக்கு, தடைகள், ஏறுவதற்கான வசதிகள் உள்ளிட்ட உள்ளரங்கு சாகச மையமாக அது விளங்குகிறது. பிரானாக்கான் கருப்பொருள் கொண்ட உள்ளரங்கு விளையாட்டு மைதானம், துப்பாக்கி சுடும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இடம் போன்றவையும் அதில் உள்ளன. தானியங்கிக் கூடங்கள், பார்வையாளர் கண்காணிப்பு, கைபேசிச் செயலி பயன்பாடு என அதன் செயல்பாடுகள் மின்னிலக்கமயமாக்கப்பட்டு, சிங்கப்பூரின் முதல் 'அறிவார்ந்த' மனமகிழ் மன்றம் என அழைக்கப்படும் விதத்தில் அமைந்துள்ளது. நடவடிக்கைகளில் பங்கேற்க செயலி மூலம் பதிவு செய்யலாம். அங்கு 'இ-மார்ட்' வசதியும் உடற்பயிற்சிக் கூடம், உணவகங்களும் உண்டு.
534 மோசடிச் சம்பவங்களில்
$9.3 மில்லியன் இழப்பு
மோசடிச் சம்பவங்களில் பணத்தைப் பறிகொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 534 மோசடிச் சம்பவங்களில் $9.3 மில்லியனுக்கும் அதிகமான தொகை இழக்கப்பட்டுள்ளது. விசாரிக்கப்பட்டு வரும் 16 முதல் 80 வயதுக்குட்பட்ட 329 பேரில் 207 பேர் ஆண்கள், 122 பேர் பெண்கள். இவர்கள் இணையக் காதல், இணைய வர்த்தகம், போலி சூதாட்டம் ஆகிய மோசடிச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. ஏமாற்றுவேலை, கள்ளப் பணப்பரிமாற்றம், உண்டியல் என்று அழைக்கப்படும் உரிமம் இன்றி வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பியது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டோருக்கு குறைந்தது
10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். கள்ளப் பணப்பரிமாற்றக் குற்றங்களுக்கு $500,000 வரை அபராதமும் பத்தாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். உரிமம் இன்றி வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் சேவையை நடத்திய குற்றத்திற்கு மூன்றாண்டுச் சிறைத் தண்டனை, $125,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

