ரமலான் மாத ஆரோக்கிய உணவு இயக்கம்

ரமலான் மாத ஆரோக்கிய உணவு இயக்கம்

2 mins read
ed24efd0-b1ea-4888-acd1-ebeae120407a
-

ரமலான் மாதம் தொடங்க இருப்பதை முன்னிட்டு, மலாய்/முஸ்லிம் சமூகத்தினரிடையே ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறையை மேம்படுத்தும் இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த இரண்டு மாத கால இயக்கத்தின்போது, நோன்பு மாதத்திலும் மே 13 அன்று வரும் நோன்புப் பெருநாளின்போதும் குறைந்த சர்க்கரையையும் ஆரோக்கியமான உணவுத் தேர்வையும் ​​சுகாதார மேம்பாட்டு வாரியம் (ஹெச்பிபி) ஊக்குவிக்கும்.

சமூக பங்காளிகளுடன் இணைந்து புகைப்பழக்கத்தைக் கைவிடவும் மக்களை வாரியம் ஊக்குவிக்கும்.

இணையத்திலும் பொதுவாவும் நடைபெறவுள்ள இனிப்பைக் குறைக்கும் இந்த இயக்கத்தை நேற்று தொடங்கிவைத்த சுகாதாரத்துக்கான நாடாளுமன்றச் செயலாளரான ரஹாயு மஹாம், கொவிட்-19 தொற்றுநோய் பரவல் முன்வைத்துள்ள சவால்களைச் சமாளிப்பதில் சமூகத்தின் மீள்திறனைக் குறிப்பிட்டார். "குடும்பமும் ஆரோக்கியமும் எங்களுக்கு முக்கியமான விஷயங்கள் என்பதை தொற்றுநோய் பரவலின்போது உணர்ந்தோம்.

"இந்த ரமலான் மாதமும் நோன்புப் பெருநாளும் எண்ணிப் பார்ப்பதற்கான, கொண்டாட்டத்திற்கான, குடும்பத்துடன் இருப்பதற்கான நேரம். ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்குதிலும் நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன். மலாய்/முஸ்லிம் சமூகம் இதைப் பின்பற்றும் என்று நான் நம்புகிறேன்," என்றார் அவர்.

புஸ்ஸோரா சாலையில் உள்ள மலாயன் கவுன்சில் உணவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், மலாய் இனத்தினரிடையே நீரிழிவு நோயாளிகளின் ஒட்டுமொத்த விழுக்காடு கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 11.6 விழுக்காட்டிலிருந்து 2020ஆம் ஆண்டில் 14.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று திருமதி ரஹாயு குறிப்பிட்டார்.

பிரதான ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக சுகாதார மேம்பாட்டு வாரியம் இந்த இயக்கத்தை சமூகத்திடம் எடுத்துச் செல்லும்.

மேலும், மலாய் / முஸ்லிம் அமைப்புகள், பள்ளிவாசல்களுடனும் இணைந்து புகைப் பழக்கத்தை நிறுத்தியவர்கள் பங்கேற்கும் மெய்நிகர் உரைகளையும் நடத்தும். அவர்கள் புகைப்பதை கைவிடுவது குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதோடு, புகை இல்லாத வாழ்க்கை முறை குறித்த உதவிக்குறிப்புகளையும், ஆதரவான சூழலை உருவாக்க குடும்ப உறுப்பினர்கள் ஆற்றக்கூடிய பங்கையும் வழங்குவார்கள்.

புகை பழக்கத்தை விட விரும்புவோர் 28-நாள் திட்டத்திற்கு healthhub.sg/korangok வழியாக பதிவு செய்யலாம். ரமலான் மாதத்தில் சுமார் 5,500 வீடுகளுக்கு இனிப்பு குறைந்த பானங்கள், பழுப்பு அரிசி, பழுப்பு அரிசி சேமியா, ஆரோக்கியமான எண்ணெய், ஆரோக்கியமான சிற்றுண்டிகள் அடங்கிய அன்பளிப்புப் பைகளையும் 'தபுங் அமல் ஐடில்ஃபிட்ரி' அற நிதியம், ஜூரோங், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள எம்3@நகரங்கள் ஆகிய பங்காளிகளுடன் இணைந்து வாரியம் விநியோகிக்கவுள்ளது.