நோன்பு துறக்கும்போது இனிப்பு நிறைந்த பானங்களுக்குப் பதிலாக தண்ணீரைக் குடிப்பது முதல் முழு தானிய உணவு வகைகளைத் தேர்வு செய்வது வரை, சில ஆரோக்கிய குறிப்புகள்:
நோன்பு துறக்கும்போது, உடம்பில் நீர்ச்சத்தை ஏற்படுத்த தண்ணீரைக் குடிக்கவும். இது அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தவிர்க்க உதவும்.
இனிப்புக் குறைந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களான சர்க்கரை இல்லாத காபி அல்லது இனிப்பு குறைவான தேநீர் போன்றவற்றைத் தேர்வுசெய்க. சர்க்கரையைக் குறைத்தாலும் காபி, தேநீரையும் மிதமாக உட்கொள்ள வேண்டும்.
நோன்பு பிடிப்பதற்கு முன்பு சாப்பிடும்போது, பழுப்பு அரிசி, முழு தானிய ரொட்டி போன்ற முழு தானிய உணவுகளைத் தேர்வுசெய்யுங்கள். இவை நீண்ட நேரம் வயிற்றில் இருக்கும். நார்ச்சத்து நிறைந்த பழங்களும் காய்கறிகளும் அவசியம்.
நோன்பு துறக்கும்போது உட்கொள்ளும் உணவு சமச்சீரானதாகவும், சத்தானதாகவும் இருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், பழுப்பு அரிசி, முழு தானிய ரொட்டி, இறைச்சி, பால் போன்ற பிற பொருட்களையும் கொண்டிருக்க வேண்டும்.
சக்தி கொடுக்கும் சிறந்த உணவாக இருந்தாலும் நோன்பு துறக்கும்போது பாரம்பரிய மாக உட்கொள்ளப்படும் பேரீச்சம் பழத்தை சர்க்கரை அதிகமாக இருப்பதால் மிதமாகவே உட்கொள்ள வேண்டும்.
வீட்டில் சமைக்கும்போது,ஆரோக்கிய முத்திரை கொண்ட பொருட்களைப் பயன் படுத்துங்கள். இவை பொதுவாக நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை, உப்பு குறைவானவையாக இருக்கும்.
உப்பு, சாஸ், சுவையூட்டி போன்றவற்றுக்குப் பதிலாக சுவைக்கு மூலிகைகளையும் மசாலாப் பொருள்களையும் பயன்படுத்துங்கள்.
அரிசி உணவுகளைத் தயாரிக்கும்போது, 20% பழுப்பு அரிசியை வெள்ளை அரிசியுடன் கலக்கவும். பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்கள் நிறைந்த உணவை உட்கொள்வது இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
எண்ணெய்யில் பொரிப்பதற்குப் பதிலாக நீராவியில் வேக வைத்தல், வாட்டுதல், வறுத்தல் போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பின்பற்றுங்கள்.
அதிக கேலரிகள் நிறைந்த எண்ணெய்யில் பொரித்த உணவுகள், குழம்பு வகைகளுக்குப் பதிலாக, மெல்லிய புரதங்கள், பழங்கள், காய்கறிகள், சூப், முழு தானியங்களை உண்ணலாம். இந்த உணவுகளில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும்.

