மருந்து உற்பத்தித் துறையில் பெரிய நிறுவனமான சனோஃபி பாஸ்டர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைப்பதில் $638 மில்லியன் தொகையை முதலீடு செய்யவிருக்கிறது.
அது குடியரசின் வளர்ந்துவரும் உயிர்மருத்துவ உற்பத்திக் குழுமத்துக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது.
இது பற்றி நேற்று அறிவித்த அந்த பிரஞ்சு பன்னாட்டு நிறுவனம், இந்தத் திட்டத்தால் 200 உள்ளூர் வேலைகள் வரை உருவாக்கப்படு வதுடன் எதிர்கால கொள்ளைநோய் அபாயங்களுக்கு எதிராக உடனடி பதில் நடவடிக்கை எடுக்கவும் உதவும் என்று தெரிவித்தது.
அந்தத் தடுப்பூசி உற்பத்தி ஆலை பெரும்பாலும் ஆசிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதுடன், ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள அதன் தற்போதைய உற்பத்தி ஆற்றல்களுக்கும் உறுதுணையாக இருக்கும்.
தற்போதைய தொழிற்பேட்டைகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலைகள், ஒரே நேரத்தில் ஒரு வகையான தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் வேளையில், துவாஸ் உயிர்மருத்துவ பூங்காவில் அமையவிருக்கும் இந்த ஆலை, ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றதாக இருக்கும் என்றும் சனோஃபி கூறியது.
இந்தப் புதிய ஆலை, தடுப்பூசி உற்பத்தியில் மின்னிலக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று சனோஃபி பாஸ்டர் நிறுவனத்தின் உலக தடுப்பூசி தொழில் விவகாரப் பிரிவின் தலைவரும் நிறுவனத்தின் மூத்த உதவித் தலைவருமான வின்செண்ட் ஹிங்கோட் தெரிவித்தார்.
தனது புதிய ஆலையில் எந்த வகையான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்று சனோஃபி விவரிக்கவில்லை.
ஆலையின் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கும். அது உற்பத்தி செய்யும் முதலாவது தடுப்பூசிக்குத் தகுந்த தகுதிகளும் அங்கீகாரங்களும் கிடைத்தவுடன், வரும் 2026 முதலாம் காலாண்டில் அந்த ஆலை முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.
"தடுப்பூசி உற்பத்திக்கு ஆசியாவின் வட்டார உன்னத மையமாக விளங்கும் புதிய சிங்கப்பூர் ஆலையான சனோஃபி, எதிர்காலத்தில் ஆசியாவில் தகுந்த பங்காளித்துவ நிறுவனத்துடன் தனது வசதிகளை விரிவு படுத்தும்," என்றும் திரு ஹிங்கோட் கூறினார்.
"சிங்கப்பூரில் சனோஃபி ஆலை கட்டி முடிக்கப்பட்டவுடன், அது உலக அளவிலான ஆகச் சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பெற்றுள்ள தடுப்பூசி உற்பத்தி மையமாகத் திகழும்.
"அந்தத் தடுப்பூசி உற்பத்தி ஆலை சிங்கப்பூருக்கு மட்டுமல்லாது, இந்த வட்டாரத்துக்கே எதிர்காலத்தில் கொள்ளைநோய் எதிர்ப்புக்கும் சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் திட்டங்களுக்கும் மிக முக்கியமான உள்கட்டமைப்பு வசதியாக அமையும்," என்றார் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் திரு பே சுவான் ஜின்.

