சிங்கப்பூர் நீரிணையில் மூன்று கடற்கொள்ளை சம்பவங்கள்; கப்பல் சிப்பந்தி ஒருவருக்கு காயம்

சிங்கப்பூர் நீரிணையில் மூன்று கடற்கொள்ளை சம்பவங்கள்; கப்பல் சிப்பந்தி ஒருவருக்கு காயம்

2 mins read
d8e574aa-fb3e-43b7-843f-5b04b3fa3661
-

சிங்கப்பூர் நீரிணையில் கடந்த வாரத்தின் நான்கு நாட்களில் ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று கப்பல்களில் அத்துமீறி நுழைந்து உள்ளனர்.

அந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று அருகருகே, போக்குவரத்துப் பிரிப்பு திட்டத்தின் கிழக்கு நோக்கிச் செல்லும் கடற்பாதையில் நிகழ்ந்து உள்ளன என்று 'ரீகேப்' எனும் ஆசியாவில் கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் கப்பல்களில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களுக்கு எதிரான வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டின் தகவல் பரிமாற்ற நிலையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

இம்மாதம் 8ஆம் தேதி, 'ட்ரினா ஓல்டன்டோஃப்' எனும் சரக்குக் கப்பலின் இயந்திர அறைக்குள் நுழைய முயன்ற கொள்ளையன் ஒருவனைப் பார்த்து உதவிக்குக் கத்த முயன்ற கப்பல் சிப்பந்தி ஒருவரின் தலையில் அந்தக் கொள்ளையன் அடித்தான்.

அந்தக் கப்பல் இந்தோனீசியாவின் தஞ்சோங் பெர்காமை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது நான்கு கடற்கொள்ளையர்கள் கையில் கத்தியுடன் அதிகாலை 1.47 மணிக்குக் கப்பலின் இயந்திர அறையில் காணப்பட்டனர். பின்னர் சிப்பந்தி ஒருவரைத் தாக்கிவிட்டு அவர்கள் தப்பித்தனர்.

"கப்பலின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொள்ளையர்கள் யாரும் தென்படவில்லை என்றும் எந்தப் பொருளும் திருடு போகவில்லை என்றும் கப்பலின் தலைவர் கூறினார்," என்று தகவல் நிலையம் கூறியது.

இரண்டாவது சம்பவம் அதே நாளில் காலை 5.50 மணிக்கு நிகழ்ந்தது. 'ஹரிஸ்பர்க்' எனும் பெட்ரோலிய கப்பல் அதே கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இரு கொள்ளையர்கள் கப்பலுக்குள் நுழைந்தனர். அப்போது எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, அவர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர்.

மூன்றாவது சம்பவம், இம்மாதம் 11ஆம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு, 'பான்டசிஸ் எல்' எனும் சரக்குக் கப்பல் அதே கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, நான்கு கொள்ளையர்கள் இயந்திர அறையில் காணப்பட்டனர்.

கப்பலின் தலைவர் சிங்கப்பூர் கப்பல் போக்குவரத்து தகவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். பிறகு கொள்ளையர்கள் கப்பலில் காணப்படவில்லை. இருப்பினும், சில இயந்திர உதிரிப் பாகங்கள் களவாடப்பட்டது பின்னர் தெரிய வந்தது.

இச்சம்பவங்கள் பற்றி சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் கடல்துறை பாதுகாப்புப் பணிக்குழு, சிங்கப்பூர் கடலோரக் காவற்படை, மலேசியா மற்றும் இந்தோனீசியா ஆகியவற்றின் கடல்துறை அமைப்புகள் ஆகியவற்றுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மொத்தம் பத்து கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் அவற்றில் ஒன்பது சம்பவங்கள் அதே கடற்பகுதியில் நடந்துள்ளன என்றும் 'ரீகேப்' அமைப்பின் தகவல் பரிமாற்ற நிலையம் தெரிவித்தது.