புதிதாக 25 கொவிட்-19 சம்பவங்கள்; சமூகத்தில் யாரும் இல்லை

புதிதாக 25 கொவிட்-19 சம்பவங்கள்; சமூகத்தில் யாரும் இல்லை

2 mins read
7869993c-2e9d-41f0-af6a-2f72c41b6859
-

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 25 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அவர்கள் தற்போது வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை அல்லது தனிமைப்படுத்தும் உத்தரவை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சுகாதார அமைச்சு நேற்று தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்தது.

நேற்று அறிவிக்கப்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 60,678ஐ எட்டியுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிக்கையில் சமூகத்திலோ அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியிலோ எவருக்கும் கொரோனா கிருமி தொற்றவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர் ஊழியர் தங்குவிடுதியைச் சேர்ந்தவர் என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன், ஆறு வாரங்களுக்கு முன்பு அதாவது பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதியில் இப்போதுதான் கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.

துறைமுக ஊழியராக வேலை செய்யும் இந்தியாவைச் சேர்ந்த வொர்க் பெர்மிட் அட்டை வைத்திருக்கும் அந்த 23 வயது ஆடவர், பிரானி டெர்மினல் அவென்யூவில் உள்ள ஊழியர் தங்குவிடுதியில் வசித்து வருகிறார்.

அங்கு கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட வழக்கமான கிருமித்தொற்று பரிசோதனையின்போது அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதற்கு அடுத்த நாள் அவரது பரிசோதனை முடிவுகள் வந்து, கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், அவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டார்.

பின்னர் அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் கிருமித்தொற்று இருப்பதைத் தெரிவித்ததுடன் அந்த ஆடவர் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

"தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தனிநபர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவது சாத்தியமே என்று நினைவூட்டுவதாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

"பொதுவாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரும்பாலானவர்களிடம் கிருமி தொற்றுவது மிகவும் குறைவு. அந்த ஊழியரின் சிரோலஜி பரிசோதனையில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அவரது உடலுக்குள் 'ஆன்டிபாடிகள்' உற்பத்தியாகி இருக்கலாம்," என்றும் சுகாதார அமைச்சு விளக்கியது.