ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கினாலும் கொரோனா தொற்றுக் காலத்துக்கு முந்தைய ஆண்டுகளைப்போல பெரிய திருவிழாவாக அது இருக்காது என்றும் தொற்றுப் பரவல் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதால் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
கொரோனா கிருமிக்கு எதிரான போரில் நமது பங்கைத் திறம்பட ஆற்றினால், அடுத்த ஆண்டு ரமலான் மாதத்தில் கூடுதல் நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
இன்று முதல் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை ரமலான் நோன்பும் மே மாதம் 13அம் தேதி நோன்புப் பெருநாளும் கொண்டாடப்படுகிறது. மூக்கின் வழியாக எச்சில், சளி மாதிரி பரிசோதனை செய்வது ரமலான் மாத நோன்புக்கு பங்கம் விளைவிக்காது என சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் குறிப்பிட்டதை வலியுறுத்திய அதிபர் ஹலிமா, வாய்ப்புக் கிடைக்கும்போது தங்களது தடுப்பூசிக்காக பதிவு செய்துகொள்ள முஸ்லிம்களை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு ரமலான் கூட்டுத் தொழுகைகளை முஸ்லிம்கள் மேற்கொள்ளலாம் என்றும் அவற்றுக்கு இணையம் வழியாக பதிவு செய்வது அவசியம் எனவும் அதிபர் குறிப்பிட்டிருந்தார். பள்ளிவாசல் நிகழ்வுகள், 'ஸக்காத் ஃபித்ரா'வுக்கு பணம் செலுத்துவது போன்றவற்றை இணையம் வழி செய்யவும் அவர் ஊக்குவித்தார்.
நேற்று மாலை சூரியன் மறைந்து 16 நிமிடங்களுக்குப் பிறகு பிறை தென்பட்டதை அடுத்து இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் நஸிருதின் முகமது நாசிர் அறிவித்தார்.

