அண்மையில் பட்டதாரிகளான ஏறத்தாழ 7,600 பேர் எஸ்ஜியுனைடெட் பயிற்சித் திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.
எஸ்ஜியுனைடெட் நடுத்தர வயதினருக்கான வேலைப் பாதை திட்டத்தில் 1,900 நடுத்தர வயது ஊழியர்கள் பங்கெடுத்தனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் கடந்த ஆண்டு வேலை வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்தன.
இந்த நிலையை எதிர்கொள்ள இந்த இரு திட்டங்களும் அறி
முகப்படுத்தப்பட்டன.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதி நிலவரப்படி, இத்திட்டங்களின்கீழ் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோதே கிட்டத்தட்ட 200 பேருக்கு முழுநேர வேலை கிடைத்ததாக மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் ஊழியரணியும் நேற்று கூறின.
மேலும் 160 பேர் பயிற்சித் திட்டங்களை முடித்துவிட்டனர்.
இந்த இரு திட்டங்களிலும் ஏறத்தாழ 2,500 அமைப்புகள் பங்கெடுத்துள்ளன. அவற்றில் அரசாங்க அமைப்புகளும் அடங்கும்.
திட்டங்களில் பங்கெடுப்பவர்
களுக்கு இந்த அமைப்புகள் பயிற்சி அல்லது வேலை அனுபவ வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
திட்டத்தில் பங்கெடுத்துள்ள பத்தில் ஒன்பது அமைப்புகள் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்புகளை தகவல்
தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் ஊடகம், நிதிச் சேவைகள், நிபுணத்துவச் சேவைகள் ஆகிய துறைகள் வழங்குகின்றன.
அடுத்த சில மாதங்களில் மேலும் 15,000 பயிற்சி, வேலை அனுபவ வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் ஊழியரணியும் தெரிவித்தன. வேலையின்மை விகிதம் குறைந்து வரும் நிலையில் வேலை விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் சற்று குறைந்திருப்பதாக சிங்கப்பூர் ஊழியரணி கூறியது.
குறைந்தது ஒரு பயிற்சி அல்லது வேலை அனுபவ வாய்ப்பைப் பெற்றவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் அதை ஏற்க மறுத்தனர்.
நடுத்தர வயது ஊழியர்களைக் காட்டிலும் பெரும்பாலும் புதிய பட்டதாரிகளே அவ்வாறு செய்தனர்.
மற்றொரு பயிற்சித் திட்டம் அல்லது முழுநேர வேலை கிடைத்ததே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்நிலையில், எஸ்ஜியுனைடெட் பயிற்சித் திட்டமும் எஸ்ஜியுனைடெட் நடுத்தர வயதினருக்கான வேலைப் பாதை திட்டமும் நீட்டிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு பயிற்சித் திட்டங்கள், வேலை அனுபவ வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கும் நிறுவனங்கள் நிதி ஆதரவுக்குத் தகுதி பெறுகின்றன.
இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து தொழில்நுட்பக் கல்விக் கழக சான்றிதழ் பெற்றவர்கள், பட்டயச் சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோருக்கான பயிற்சிப் படித்தொகை உயர்த்தப்பட்டுள்ளன.
வேலை தேடும் 40 வயதுக்கும் மேற்பட்ட நடுத்தர வயதினருக்குமான பயிற்சிப் படித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

