சிங்கப்பூரில் ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக வியாபார இணையத்தளமான 'பைன் லேப்ஸ்' நிறுவனம், 'ஃபேவ்' என்ற கணினி வர்த்தக மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனத்தை வாங்கி இருக்கிறது.
அந்தக் கொள்முதலில் ரொக்கமும் பங்கு முதலும் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. கொள்முதல் மதிப்பு US$45 மில்லியன் (S$60.3 மில்லியன்) எனத் தெரிவிக்கப்பட்டது.
இரு நிறுவனங்களும் சேர்ந்து உலகளவில் விரிவடைய ஏதுவாக இந்தக் கொள்முதல் இடம்பெற்று இருப்பதாக பைன் லேப்ஸ் நிறுவனமும் ஃபேவ் நிறுவனமும் நேற்று அறிவித்தன.
ஃபேவ் முதலீட்டாளர்கள் முற்றிலும் ரொக்கமாக பணப்பட்டுவாடா ஒன்றைப் பெறுவார்கள். அந்த நிறு வனத்தை நிறுவியவர்களுக்கும் முக்கியமான ஊழியர்களுக்கும் ரொக்கமும் பைன் லேப்ஸ் பங்குகளும் கிடைக்கும் என்று கூட்டறிக்கை தெரிவித்தது.
'சேகுவா இந்தியா', சீனாவைத் தளமாகக் கொண்ட 'எஸ்ஐஜி ஏஷியா இன்வெஸ்ட்மண்ட்ஸ்', இந்தோனீசியாவின் கூட்டுத்தொழில் பங்குமுதல் நிறுவனமான 'வென்சுரா கேப்பிட்டல்' ஆகியவை ஃபேவ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக இருக்கின்றன.
அந்நிறுவனத்தில் கடந்த ஜூலையில் பைன் லேப்ஸ் முதலீடு செய்தது. அது முதல் இந்த இரண்டும் உத்திபூர்வ பங்காளித்துவ உறவை ஏற்படுத்திக்கொண்டன.
ஃபேவ் நிறுவனம் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா நாடுகளில் செயல்படுகிறது. முன்னதாக அது 2016 மற்றும் 2017ல் பல தொழில்துறை கொள்முதல்களைச் செய்திருந்தது.
இந்த ஆண்டில் இந்தியாவில் ஃபேவ் நிறுவனம் செயல்பாட்டைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

