சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளைப் பார்க்கையில், தனியார் கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்களைவிட தன்னாட்சி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் சிறப்பான நிலையில் இருக்கிறார்கள்.
ஆகப் புதிய பட்டதாரிகள் வேலை நியமன ஆய்வு முடிவுகள் இவ்வாறு தெரிவிக்கின்றன.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் இயக்கம் இந்த முடிவுகளை வெளியிட்டது.
30 தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த, 2019 மே மாதத்திற்கும் 2020 ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் பட்டம் பெற்ற ஏறத்தாழ 2,500 பட்டதாரிகளுக்கான வேலை நிலவரங்களில் அந்த ஆய்வு ஒருமித்த கவனம் செலுத்தியது.
ஆய்வில் உள்ளடக்கப்பட்ட பட்டதாரிகளில் பலரும் வேலைகளில் இருந்தார்கள். மற்றவர்கள் வேலை தேடிக்கொண்டு இருந்தார்கள்.
அந்தப் பட்டதாரிகளில் ஏறத்தாழ 81 விழுக்காட்டினருக்கு இறுதித்தேர்வு எழுதிய ஆறு மாத காலத்திற்குள் வேலை கிடைத்துவிட்டது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற தன்னாட்சி பெற்ற கல்வி நிலையங்களைச் சேர்ந்த பட்டதாரிகளைப் பார்க்கையில் இந்த அளவு ஏறத்தாழ 94 விழுக்காடாக இருந்தது என்று வேலை நிலவரங்கள் பற்றிய அந்த ஆய்வு தெரிவித்தது.
படித்து முடித்து ஆறு மாதத்திற்குள் வேலையில் அமர்ந்த தனியார் கல்வி நிலைய பட்டதாரிகளில் 49 விழுக்காட்டினருக்கு முழுநேர வேலை கிடைத்தது.
இந்த அளவு, தன்னாட்சி பல்கலைக்கழகப் பட்டதாரிகளிடம் 69.8 விழுக்காடாக இருந்தது.
தேசிய சேவைக்குப் பிந்தைய பலதுறை தொழில்நுட்பக் கல்வி பட்டதாரிகளின் வேலை வாய்ப்பும் 91.9 விழுக்காடு மற்றும் 65.5 விழுக்காடு என்ற அளவில் அதிகமாக இருந்தது.
முழுநேர வேலை பெற்ற தனியார் கல்வி நிலைய புதிய பட்டதாரிகளின் மொத்த சராசரி மாதச் சம்பளம் $2,900 ஆக இருந்தது. இது தன்னாட்சி கல்வி நிலைய பட்டதாரிகளைப் பொறுத்தவரை $3,700 ஆகும்.
தேசிய சேவைக்குப் பிந்தைய தொழில்கல்வி பட்டதாரிகள் மாதம் மொத்த சராசரி சம்பளமாக $2,500 பெற்றதாக ஆய்வு தெரிவிக்கிறது.
தனியார் கல்வி நிலைய பட்டதாரிகளின் வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ளும் நோக் கத்தில் இந்த ஆய்வை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் இயக்கத்தின்கீழ் தனியார் கல்விக் குழு ஒன்று ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

