எஸ்.வெங்கடேஷ்வரன்
கடந்த ஆண்டு நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பிலிருந்ததால் வழக்கம்போல சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது.
கொவிட்-19 தொற்றுச் சூழல் சீராகி வருவதால் புத்தாண்டை கொண்டாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது என்றார் தேக்காவிற்கு நேற்று குடும்பத்துடன் வந்திருந்த திரு சுரேந்திரன் வடிவேலு, 43.
"சித்திரைப் புத்தாண்டிற்கு வீட்டில் பொங்கலிட்டு, கடவுளை வழிபட்டு, கொண்டாட உள்ளோம். தேக்காவிற்கு வந்து பலகாரம், காய்கறி, உணவுப் பொருள்கள் வாங்கியுள்ளோம்," என்றார் திரு சுரேந்திரன்.
புனித ரமலான் மாதத் தொடக்கம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியப் புத்தாண்டுகள், வட இந்தியர்கள் கொண்டாடும் வசந்த நவராத்திரி ஆகிய பல பண்டிகைகள் ஒன்றாக வருவது நல்ல அறிகுறி என்றார் திரு அருண்பாண்டியன், 52.
"கடந்த ஆண்டு புத்தாண்டு காலத்தில் மக்கள் கொரோனா தொற்றுக்குப் பயந்து பீதியில் இருந்தனர். பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும்படி வலியுறுத்தியபடியே இருக்க வேண்டி இருந்தது. வியாபாரமும் குறைவாக இருந்தது. ஆனால் இவ்வாண்டு மக்கள் தேக்கா கடைகளுக்கு நிம்மதியாக வருகின்றனர். வியாபாரமும் கொஞ்சம் முன்னேறியுள்ளது," என்றார் ஜோதி புஷ்பக் கடையின் திரு ராஜ்குமார் சந்திரா.
"கடந்த சில ஆண்டுகளைவிட வாடிக்கையாளர்களின் வருகை சற்று குறைந்துதான் இருக்கிறது. இருந்தாலும் புத்தாண்டு உணர்வு மேலோங்கியே உள்ளது," என்றார் அப்போலோ செல்லப்பாஸ் கடை நிர்வாகி திரு சாரங்கபாணி ராஜசந்திரன், 37.
விலைவாசி ஏறுமுகம்
உள்ளூர்வாசிகள் வருகை ஓரளவுஅதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் வராமல் இருப்பது, விமானத்துறை முடக்கம் ஆகியவை தொடர்ந்து வர்த்தகத்தைப் பாதித்து வருகின்றன என்று லிட்டில் இந்தியாவின் சில பூ, காய்கறிக் கடைகள் தெரிவித்துள்ளன.
"வழக்கமான விமானப் போக்கு வரத்து இல்லாததால் பூக்களைக் குறிப்பிட்ட சரக்கு விமானங்களில் மட்டுமே இறக்குமதி செய்ய முடிகிறது. அதனால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஐந்து வெள்ளி பூமாலையின் விலை எட்டு, ஒன்பது வெள்ளியாக உயர்ந்துவிட்டது. அதிகமான விலைக்கு விற்றால் மக்களும் வாங்கமாட்டார்கள். வாடிக்கையாளர் வருகையும் முன்போல இல்லை. எஸ்-பாஸ் ஊழியருக்கான ஊதிய வரம்பும் அதிகரித்துள்ளதால் லாபம் பார்ப்பது கடினம்," என்றார் கல்யாணி பூக்கடை உரிமையாளர் திரு வேலுச்சாமி, 66.
லிட்டில் இந்தியாவிற்கு வரும் புதிய வரத்து காய்கறிகளில் 70 விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்நாட்டின் திருச்சி, சென்னை நகரங்களில் இருந்து வருவதாக தேக்கா சந்தை வணிகர்கள் தெரிவித்தனர். கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச்சில் இருந்து காய்கறிகளின் விலை குறைந்தது மூன்று மடங்கு அதிகரித்துவிட்டதாக சிங்கப்பூர் வணிகர்கள் கூறுகின்றனர்.

