புனித ரமலான் மாதம் நேற்று தொடங்கிய நிலையில் சிங்கப்பூர் முழுவதும் முஸ்லிம்கள் நேற்று முதல் நோன்பிருக்கத் தொடங்கிவிட்டனர். அவ்வகையில், நேற்றுக் காலை 'சகர்' உணவுண்டு, நோன்பு தொடங்கு முன் மனிதவள, தற்காப்பு துணை அமைச்சர் ஸாக்கி முகம்மதும் தொண்டூழியர்கள் பலரும் அதிகாலையிலேயே சுவா சூ காங் குரோவில் உள்ள விரைவுக் கட்டுமான தங்குவிடுதிக்குச் சென்றுவிட்டனர்.
அங்கிருக்கும் வெளிநாட்டு முஸ்லிம் ஊழியர்களுக்கு 'சகர்' உணவாகச் சப்பாத்தி, பருப்புக்கறி, இனிப்பு, பழம், பால் என 800க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
"இந்த ரமலானை இன்னும் அர்த்தமுள்ளதாக்கும் விதமாக, எல்லாத் தரப்பு சிங்கப்பூரர்களும் ஒன்றிணைந்து நமது வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிப்பது மகிழ்ச்சி தருகிறது," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு ஸாக்கி பதிவிட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களுடன் ஒன்றாக அமர்ந்து விடியலுக்குமுன் உணவுண்டு, பின் அவர்களுடன் இணைந்து தொழுகை மேற்கொண்டார் திரு ஸாக்கி.
"ஓராண்டுக்குமுன் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடைமுறையில் இருந்தபோது மிகவும் வேறுபட்ட சூழலில் நாம் ரமலான் நோன்பைத் தொடங்கினோம். இப்போது நிலைமை பெரிதும் மேம்பட்டுள்ளது. மீட்புப் பாதையில் இருக்கிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதவள அமைச்சின்கீழ் செயல்படும் 'ஏஸ்' அமைப்பு, 'ஹோம் ஃபார் ஆல் மைக்ரன்ட்ஸ்' எனும் அரசு சாரா அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தேர்ச்சி அடிப்படையில் பயிற்சி வழங்கும் 'எஸ்டிஐ' பயிலகம் ஆகியவை இணைந்து இந்த விடியலுக்குமுன் உணவுத் திட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
இரவுத் தொழுகை (தராவிஹ்), பள்ளிவாசல்களில் கஞ்சி விநியோகம் என இவ்வாண்டு சிங்கப்பூரில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக ரமலான் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது.
ரமலான் மாதத்தில் தங்குவிடுதிகளில் அதிகபட்சம் 200 பேர் வரை ஒன்றுகூடித் தொழுகை நடத்தலாம் என மனிதவள அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
சிங்கப்பூர் பள்ளிவாசல்களும் சில சமூக மன்றங்களும் வழக்கம் போல நேற்று கஞ்சி விநியோகத்தை மீண்டும் தொடங்கின.

