கொண்டோமினியத்தில் ஏணியில் இருந்து பின்புறமாக, பத்தாவது தளத்தில் இருந்து மூன்றாம் தளத்தில் விழுந்து 23 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
இம்மாதம் 5ஆம் தேதி திங்கட்கிழமையன்று 'வாட்டர்மார்க்@ராபர்ட்சன் கீ' குடியிருப்பில் இவ்விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்திலேயே அந்த இளையர் இறந்துவிட்டதாக துணை ராணுவப் படையினர் தெரிவித்தனர்.
அவ்விளையர் பணியாற்றிய 'ஏபெக்ஸ் வோர்ல்டுவைட் மூவர்ஸ் அண்ட் சர்வீசஸ்' நிறுவனம் வேலையை நிறுத்துமாறு மனிதவள அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
ரிவர் வேலி பகுதியில், 5 ரோடைக் ஸ்திரீட்டில் உள்ள அந்த கொண்டோமினியத்தில் அறைகலன்களை அப்புறப்படுத்தும் பணியில் அந்த ஆடவர் ஈடுபட்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது என்று மனிதவள அமைச்சு தெரிவித்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டிருந்தது.
இவ்வாண்டில் வேலையிடத்தில் நிகழ்ந்த 13வது மரணம் இது. விபத்து குறித்து அமைச்சு விசாரித்து வருகிறது.
ஆடவர் மரணம் குறித்து முதலில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றச் சஞ்சிகையில் நேற்று முன்தினம் செய்தி வெளியாகி இருந்தது.
அந்த கொண்டோமினியத்தின் பத்தாம் தளத்திலுள்ள ஒரு வீட்டிலிருந்து அறைகலன்களையும் மின்சாதனங்களையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர் குழுவில் அவரும் இடம்பெற்று இருந்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி நிகழ்ந்த மற்றொரு வேலையிட விபத்தில், யுனிவர்சிட்டி வாக்கில் உள்ள ஒரு தனியார் வீட்டில் கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்துகொண்டிருந்தபோது நிரந்தரவாசியும் 'ஜேஎம்எஸ் கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனத்தின் இயக்குநருமான கோ கோக் ஹெங் எனும் ஆடவர் 4.7 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து மரணமடைந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் வேலையிடத்தில் மேலே இருந்து கீழே விழுந்து பத்துப் பேரும் 2020ல் 11 பேரும் இறந்துபோனதாக வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத் தரவுகள் தெரிவிக்கின்றன. வேலையிட விபத்துகள் மூலம் 2019ல் 39 பேரும் 2020ல் 30 பேரும் உயிரிழந்து விட்டனர்.