உணவு விநியோக ஊழியர்களை மையமாக வைத்து புதுவித மோசடி உருவாகியுள்ளதை போலிசார் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் உணவு கொள்முதல் ஆணை பிறப்பித்து அதை விநியோகம் செய்யும்படியும் அப்பொழுது அதற்கான கட்டணம் ரொக்கமாகக் கொடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் உணவு விநியோக செயலிக்கு தகவல் வரும்.
உணவிற்கான கட்டணத்தை செலுத்தும் சாக்கில் அந்த செயலியின் மூலம் உணவு விநியோகிப்பாளரின் கைத்ெதாலைபேசி எண்ணைத் தரும்படி கோரப்படும்.
பின்னர் உணவு விநியோகிப்பவருக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் மறைச்சொல் அவரது கைத்தொலைபேசிக்கு வரும்.
இதை விநியோகிப்பாளர் தனது 'பேலா' கணக்குடன் இணைத்து உணவுக்கான கட்டணத்தை பெறும்படி அறிவுறுத்தப்படுவார்.
இதைத் தொடர்ந்து அவரது 'பேலா' கணக்கு கூகல் கணக்கு ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவருக்கு தகவல் வரும்.
பின்னர் உணவு விநியோகிப்பவர் குறிப்பிட்ட இடத்துக்கு உணவுடன் செல்லும்போது அதைப் பெற்றுக்கொள்ள எவரும் இருக்கமாட்டார்கள்.
இப்படி இவருக்கு தெரியாமல் இவருடைய வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பல கொடுக்கல் வாங்கல் சம்பவங்கள் நிகழும்.
இதனால், பொதுமக்கள் தங்களுக்கு வரும் மறைச்சொல்லை கைத்தொலைபேசியில் அழுத்தும் முன் சம்பந்தப்பட்ட கொள்முதல் ஆணை தங்களுடையதுதானா என்பதை உறுதி செய்துகொண்டபின் அவ்வாறு செய்யுமாறு போலிசார் அறிவுறுத்துகின்றனர்.
அத்துடன், தங்களது 'பேலா' கணக்குகள் அனுமதியின்றி மற்ற கணக்குகளுடன் இணைக்கப்படுமானால் உடனே தங்கள் வங்கியிடம் தெரிவிக்குமாறு போலிசார் கூறுகின்றனர்.
மேலும் ஏதாவது மோசடி சம்பவங்கள் நிகழ்வதாகத் தெரிந்தால் உடனே தங்களுக்கு புகார் அளிக்குமாறும் பொதுமக்களை போலிசார் கேட்டுக்கொள்கின்றனர்.

