எஸ்ஆர்எக்ஸ்: கூட்டுரிமை, வீவக வீடுகளின் வாடகை தொடர்ந்து அதிகரிப்பு

எஸ்ஆர்எக்ஸ்: கூட்டுரிமை, வீவக வீடுகளின் வாடகை தொடர்ந்து அதிகரிப்பு

2 mins read
edb59699-38c8-4570-acac-49b3591cdc5a
-

கூட்டுரிமை மற்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டு வாடகை மார்ச் மாதத்தில் தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது.

வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை உயர்ந்துவரும் காலகட்டத்தில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சொத்துச் சந்தை நிறுவனமான 'எஸ்ஆர்எக்ஸ்' அதன் இணையத்தளத்தில் இன்று தரவு வெளியிட்டது.

சென்ற மாதம் வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை எட்டு மாதங்களில் ஆக அதிகம் என்று கூறப்படுகிறது.

பிப்ரவரியில் வாடகைக்கு விடப்பட்ட 3,865 கூட்டுரிமை வீடுகளைவிட மார்ச் மாதம் 32.4% அதிகமாக, அதாவது மொத்தம் 5,118 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.

அதேபோல் வாடகைக்கு விடப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கையும் ஒன்பது மாதங்களில் காணாத அளவில் உயர்ந்திருந்தது. பிப்ரவரி மாதத்தில் 1,404 வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.

மார்ச் மாதத்தில் 41.2% அதிகமாக, அதாவது மொத்தம் 1,983 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.

இருப்பினும், அண்மையில் பதிவாகியுள்ள வீவக வாடகை வீடுகளின் எண்ணிக்கை, மார்ச் மாதத்திற்கான ஐந்தாண்டு சராசரி எண்ணிக்கையைக் காட்டிலும் 12.5% குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச்சில் 0.8% அதிகரித்தது. வீவக வீடுகளின் வாடகை அதே காலகட்டத்தில் 0.5% அதிகரித்தது.

கூட்டுரிமை வீட்டு வாடகைகள் மூன்றாவது மாதமாக ஏறுமுகமாக உள்ளது.

அத்துடன் சென்ற ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.4% அதிகரித்துள்ளது. இருப்பினும் 2013ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்த உச்சத்தைக் காட்டிலும் 13.2% குறைவே.

வீவக வாடகைகள் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக உயர்ந்துள்ளன. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தைக் காட்டிலும் 3.4% அதிகமாகவும் உள்ளது. ஆனால் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருந்த உச்சத்தைக் காட்டிலும் 11.2% குறைந்தே உள்ளது.

கட்டுமான வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முடிவடையாத நிலையில் வீடுகள் இருப்பதாகவும் இதனால் பலர் வாடகைக்கு விடப்படும் கூட்டுரிமை, வீவக வீடுகளை நாடுவதாகவும் கூறப்படுகிறது.