வேலைக்கு ஆளெடுக்கும்போது வழக்கமான தகுதிகளைக் காட்டிலும் தொடர்புத் திறன்கள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் உத்திபூர்வமாகச் சிந்திக்கும் திறன் கொண்டவர்களுக்குச் சிங்கப்பூர் நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பதாக 'லிங்க்டுஇன்' கருத்தாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
எதிர்காலப் பணிச்சூழலைக் கருத்தில்கொண்டு, 39% நிறுவனங்கள் தொழில்நுட்பத் தேர்ச்சி பெற்றிருப்பவர்களையும் 31% நிறுவனங்கள் மாற்றத்தக்கத் தேர்ச்சிகளைக் கொண்டிருப்பவர்களையும் நாடுவதாக அந்தக் கருத்தாய்வு கூறுகிறது.
கல்வித் தகுதிக்கு 8% நிறுவனங்களும் வேலை அனுபவத்திற்கு 12% நிறுவனங்களும் முன்னுரிமை தருவதாகத் தெரிவித்து உள்ளன.
திறன் இடைவெளியைக் குறைக்க, தங்களது துறையைவிட்டு வேறு துறைகளில் இருந்தும் ஆளெடுக்க ஐந்தில் மூன்று நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.
காலிப் பணியிடங்களை நிரப்ப நிறுவனத்திற்குள்ளேயே ஆள் தேடுவதாக பத்தில் ஒன்பது நிறுவனங்களும் இப்போது இருக்கும் பணியாளர்களைக் கொண்டே அவ்வேலைகளைப் பூர்த்தி செய்ய விரும்புவதாக 65% நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
அதன்பின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த விஷயத்தில், மனிதவளப் பிரிவு அதிகப் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கலாம்.
ஊழியர் பயிற்சியிலும் மேம்பாட்டிலும் மனிதவளப் பிரிவு முக்கியப் பங்காற்றுவதாக ஏறத்தாழ 60% நிறுவனங்கள் கருதுவது அந்தக் கருத்தாய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 பரவலின்போது தொழில் உத்திகள் வடிவமைப்பில் மனிதவளப் பிரிவு குறிப்பிடத்தக்க பங்காற்றி வருவதாக 57% நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள நிறுவனங்களைச் சேர்ந்த 3,500 பேரும் மனிதவளப் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு மூத்த நிர்வாகிகள் 505 பேரும் 'எதிர்காலத் திறனாளர்கள்' என்ற இந்த இணையவழி கருத்தாய்வில் பங்கேற்றனர்.

