பணிப்பெண்ணை ஓங்கி அறைந்ததில் பணிப்பெண்ணுக்கு காது கேளாத நிலை ஏற்பட்டது. பணிப்பெண்ணை அவ்வாறு ஓங்கி அறைந்த முதலாளிக்கு இன்று 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மியன்மார் நாட்டு பணிப்பெண்ணான 30 வயது தாங் கா லாமை 51 வயதான முதலாளி காயத்திரி ஐயர் இரு முறை துன்புறுத்தியது கடந்த பிப்ரவரியில் நிரூபணமானது.
தஞ்சோங் ரு ரோட்டில் இருக்கும் பெபிள் பே கொண்டோமினியத்தில் வசிக்கும் காயத்திரியின் வீட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணிப்பெண்ணாகச் சேர்ந்தார் திருவாட்டி தாங்.
அதே ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி காயத்திரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது 'ம்மா' எனும் சொல்லை தாம் பயன்படுத்தியதும் கோபமடைந்த காயத்திரி பணிப்பெண்ணின் தோளில் அடித்தார். அதனால் ஏற்பட்ட உராய்வு காயம் மேல் தோளில் இருந்து கழுத்துவரை நீண்டதை திருவாட்டி தாங் வைத்திருந்த புகைப்படம் காட்டியது.
அதே ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, அப்போது தேசிய சேவை செய்துகொண்டிருந்த தம் மகனை திருவாட்டி தாங் எழுப்பிவிடாததற்காக அவரை ஓங்கி அறைந்தார் காயத்திரி. அதிகாலை 5.40 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின்போது இடது காதில் இருமுறையும் வலது காதில் ஒருமுறையும் காயத்திரி அறைந்ததாகக் கூறப்பட்டது. அதனை அடுத்து அன்று முழுவதும் பணிப்பெண்ணின் இடது காது கேட்கவில்லை.
ஐந்து நாட்களுக்குப் பிறகு காயத்திரியின் வீட்டிலிருந்து வெளியேறி, தாம் எதிர்கொண்டவற்றை போலிசில் தெரிவித்தார் திருவாட்டி தாங். கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதிக்குள்ளாக அவர் காயங்களிலிருந்து தேறினார்.
சாங்கி சிறைச்சாலையில் 9 மாதங்களுக்கு முன்பு ஆலோசகராக இருந்ததையும், தன்னுடைய உறுப்புகளை தானம் செய்ய காயத்திரி சம்மதம் தெரிவித்ததையும் குறிப்பிட்டு 9 வார சிறைத்தண்டனை விதிக்கும்படி காயத்திரியின் வழக்கறிஞர் கோரினார்.
பணிப்பெண்ணுக்கு $5,330 இழப்பீடு வழங்கவும் காயத்திரிக்கு ஆணையிடப்பட்டது. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் காயத்திரிக்கு $15,000 மதிப்பில் பிணை வழங்கப்பட்டது. பணிப்பெண்ணைத் தாக்கிய ஒவ்வொரு குற்றச் செயலுக்கும் அவருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை, $7,500 வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

