கி. ஜனார்த்தனன்
கடந்த தமிழ்ப் புத்தாண்டின்போது வீட்டில் முடங்கியிருந்த பலருக்கு இவ்வாண்டு சித்திரை புத்தாண்டின்போது கோயில்களுக்குச் செல்ல முடிந்தது மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லைகள் மீண்டும் திறந்து வெளிநாட்டுப் பயணங்கள் எப்போது தொடங்கும் என்பதே பலரது எண்ணங்களில் இருந்த ஒரு கேள்வியாகவும் வேண்டுகோளாகவும் இருந்தது. இரண்டு கோயில்களிலுமே வழக்கத்திற்கு மாறான கூட்டம் இருந்தாலும் சமூக இடைவெளி கட்டிக்காக்கப்பட்டது. ஆலயங்களுக்குள் செல்லும் பக்தர்களிடையே சமூக இடைவெளி இருப்பதை ஆலயம் உறுதி செய்தது. வார நாளாக இருந்ததால் நேற்றுக் காலை 10 மணிக்குப் பிறகு கூட்டம் கணிசமாகக் குறையத் தொடங்கியது.
புத்தாண்டை மீண்டும் கோயிலில் கொண்டாடுகிறோம் என்ற புத்துணர்வுடன் வேட்டி சட்டை அணிந்தவாறு 33 வயது தகவல் தொழில்நுட்ப நிபுணர் பழனியப்பன் அழகராஜ், தமது இரண்டு வயது மகன் மதன் வீரன், மனைவி ஷோபா தேவி (29) ஆகியோருடன் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். நாட்டில் கொவிட்-19 நிலவரம் மேம்பட்டு வருவது, புத்தாண்டிற்கு மகிழ்ச்சி சேர்த்திருப்பதாகக் கூறிய அவர், நோயை எதிர்ப்பதில் சமூகம் காட்டிய ஒற்றுமை தொடரவேண்டும் என வேண்டிக்கொள்வதாகத் தெரிவித்தார்.
கொரோனா நோயாளிகள் சென்றிருந்த இடங்களில் வடபத்திர காளியம்மன் ஆலயமும் ஒன்று என்ற செய்தி கடந்த மாதம் வெளிவந்ததை அடுத்து ஆலயம் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியது. பக்தர்களும் தைரியத்துடன் ஆலயத்திற்குத் தொடர்ந்து வருகை புரிந்தனர்.
"நாளைய பொழுது குறித்த நம்பிக்கையை வளர்ப்பதற்காகத்தானே நாம் ஆலயங்களுக்குச் செல்கிறோம். இவ்வாண்டு நிலைமை நிச்சயம் சீரடையும் என்று நான் நினைக்கிறேன்," என்று சேவை, உபசரிப்புத் துறையில் பணியாற்றும் பி.வீரன், 44, தெரிவித்தார்.
கடந்தாண்டு போலவே இந்தப் புத்தாண்டின்போதும் நாடு திரும்ப முடியாத மலேசியர்கள் இதையே விரும்புவதாகத் தெரிவித்தனர். தற்போதைய கிருமிப்பரவலால் சிங்கப்பூரிலேயே இருக்க வேண்டிய சூழல், தங்களுக்கு மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக சிலாங்கூரைச் சேர்ந்த 24 வயது பாதுகாவல் அதிகாரி தீபனும் ஜோகூர் பாருவைச் சேர்ந்த 23 வயது யோகாவும் தெரிவித்தனர்.
மலேசியாவில் தங்கியுள்ள தங்களின் குடும்பத்தாரைப் பார்த்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதாக இல்லத்தரசிகளான 65 வயது தமிழ் முல்லை, 67 வயது ரத்னா ஆகியோர் தெரிவித்தனர். குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதுடன் விரைவில் அவர்களை நேரில் பார்க்கவேண்டும் என்பதே தங்களின் வேண்டுதல் என இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
தமிழகத்தின் காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது பொறியாளர் முருகதாஸ், தமது தாயகத்தில் கொரோனா கிருமிப்பரவல் மேலும் தணிந்து நிலைமை சீராகவேண்டும் என வேண்டிக்கொள்வதாகத் தெரிவித்தார்.
அதேபோல் இந்தியாவில் இருக்கும் தம் குடும்பத்தைப் பற்றி நினைத்து அவ்வப்போது மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கூறிய 52 வயது காசி விசுவநாதன், நல்ல எண்ண அலைகளுக்காக இந்த தினத்தில் கோயிலுக்கு வந்ததாகக் கூறினார்.
"நம்பிக்கை மனதில் வலுவாக இருந்தால் நாம் அனைவரும் இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீண்டு வரலாம்," என்று அவர் கூறினார்.

